நாம் மந்தைகளா? மனிதர்களா? - கரூர் கற்றுத்தந்த பாடம்
அரசியல் திருவிழாக்கோலம் பூண்டிருந்த கரூரின் வீதிகள், சில மணி நேரங்களில் குருதிச் சகதியால் சிவந்து போயின.
அரசியல் திருவிழாக்கோலம் பூண்டிருந்த கரூரின் வீதிகள், சில மணி நேரங்களில் குருதிச் சகதியால் சிவந்து போயின.
ஒரு அரசியல் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், குவிந்த மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசல், 39 உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. தொலைக்காட்சிகளில் தலைவர்களின் கண்டன அறிக்கைகளும், இறந்தவர் குடும்பங்களுக்கான நிவாரண அறிவிப்புகளும் மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஊடகங்கள், கட்சியின் ஏற்பாடுகளைக் குறை கூறுகின்றன. எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையைக் கிழிக்கின்றன. ஆனால், இந்தச் சலசலப்புகளுக்கு மத்தியில், ஒரு பயங்கரமான உண்மை நம் முகத்தில் அறைகிறது. அந்த உண்மையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?
அந்தக் கூட்டத்தில் நடந்தது ஒரு விபத்து அல்ல; அது ஒரு அப்பட்டமான படுகொலை. கீழே விழுந்த சக மனிதனின் உயிர்த் துடிப்பை உணராமல், அவன் மார்பின் மீது கால் வைத்து ஏறி மிதித்து, தங்களது அபிமான நடிகரைக் காண்பதற்கு ஓடிய அந்தக் கால்கள், மனிதக் கால்கள் அல்ல. அவை, மனிதம் மரத்துப்போன மிருகத்தின் கால்கள். "ஐயோ, அம்மா!" என்று அலறிய ஒரு பெண்ணின் குரலைச் செவியில் வாங்காமல், அவளைத் தள்ளி விழுத்திவிட்டு அவள்மீது ஏறி மதித்து முன்னேற முயன்ற அந்தக் கைகள், எப்படி மனிதக் கைகளாக இருக்க முடியும்?
விலங்குகள் கூட, தன் இனத்தைச் சேர்ந்த ஒன்று அடிபட்டுக் கிடந்தால், அதைச் சுற்றி நின்று கவலை கொள்ளும். ஆனால், பகுத்தறிவு கொண்ட மனிதன் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாம், சக மனிதன் காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கையில், அவனைக் கடந்து செல்வதை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிகிறது? இது, பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டு அரசியலில் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஒரு நச்சு மனநிலையின் வெளிப்பாடு.
"மக்கள் மந்தைகள் அல்ல" என்று மேடைகளில் முழங்கும் தலைவர்கள் தான், அதே மக்களை இலவசங்களுக்காகவும், பணத்திற்காகவும் சினிமா கவர்சிக்காகவும் வரிசையில் நிற்க வைக்கும் கலையைத் திறம்படச் செய்கிறார்கள். ஒரு நாட்டின் குடிமக்களை, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் வகையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய நலன்களுக்காக அடித்துக்கொள்ல வைக்கும் நிலைக்குத் தள்ளுவது, ஒரு சமூகத்திற்கே செய்யப்படும் மாபெரும் துரோகம்.
இங்கே பிரச்சனை அரசியல் அல்ல , அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மக்களைச் சிந்திக்க விடாமல், தங்களின் அடிமைகளாக வைத்திருக்கும் தந்திரமும் தான். தன்மானத்தையும், சக மனிதன் மீதான அன்பையும் விட, ஒரு நடிகனை ,ஒரு தலைவனைப் பார்க்கச் சக மனிதனை ஏறி மிதித்துக் கொலை செய்யும் மனநிலையை உருவாக்கியது யார்? இந்தக் குற்றத்தில், அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
நிவாரணத் தொகை, இறந்த உயிர்களைத் திரும்பக் கொண்டு வந்துவிடுமா? அல்லது, இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் தருமா? நிச்சயமாக இல்லை. இந்த நிகழ்விற்கு, கூட்டத்தை ஏற்பாடு செய்த கட்சித் தலைமை மட்டுமே பொறுப்பல்ல. கூட்டத்தில், விழுந்தவர்களை மிதித்துச் சென்ற ஒவ்வொரு தனிமனிதனும் குற்றவாளிதான்.
சாட்சியங்களின் மூலமாகவும், காணொளிக் காட்சிகள் மூலமாகவும், சக மனிதனை மிதித்துக் கொன்ற சிலரையாவது அடையாளம் கண்டு, அவர்கள்மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். "கூட்டத்தில் நடந்த தவறு, யார் மீதும் பழி போட முடியாது" என்று இதைக் கடந்து சென்றால், நாளை மற்றொரு இடத்தில், இதே போன்ற ஒரு படுகொலை அரங்கேறும். அப்போது, இன்று மிதித்தவன், நாளை மிதிபடுவான்.
ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்தால் மட்டுமே, அடுத்த முறை ஒரு கூட்டத்தில் கால் தடுக்கி விழுபவனைக் காப்பாற்ற நான்கு கைகள் ஓடி வரும். இல்லையென்றால், அவனை மிதித்துச் செல்லவே கால்கள் முந்தும்.
கரூர் நிகழ்வு, ஒரு எச்சரிக்கை மணி. அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறிவிட்டு, நாம் ஒதுங்கிக் கொள்ள முடியாது. தமிழக மக்கள் , நமது சுயமரியாதையை உணர்ந்து, மனிதாபிமானத்தை மீட்டெடுக்கத் தவறினால், இது போன்ற சோக நிகழ்வுகள் தொடர்கதையாகவே இருக்கும். தலைவர்களிடம் கையேந்தும் கூட்டமாக நடிகர்களை நடிகைகளைப் பார்ப்பதற்கு முண்டியடிக்கும் கூட்டமாக இல்லாமல், தவறுகளைத் தட்டிக் கேட்கும் சமூகமாக எப்போது மாறுகிறார்களோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்; மனித உயிர்களுக்கு மதிப்பும் கிடைக்கும்.


