அவசர தேவைக்கு மட்டும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்: அமைச்சர்
.
மிக அத்தியாவசிய தேவையாக இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், சர்வதேச தரத்திற்கு ஏற்ற புதிய இ-பாஸ்போர்ட்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் வினியாகிக்கும் வரையில் விண்ணப்பங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (ICAO) நியமங்களை பூர்த்தி செய்யும் புதிய இ-பாஸ்போர்ட் அறிமுகமானது உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் நிலையை மேம்படுத்தும் என தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்ட புதிய இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் வழங்கப்படும். இது நாட்டின் பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசையை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இலங்கையின் கடவுச்சீட்டு உலகில் 193 ஆவது இடத்தில் உள்ளது, ஆனால் இ-பாஸ்போர்ட் வெளியீடு 50 க்கு மேல் தரவரிசையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கடவுச்சீட்டில் உரிமையாளரின் அனைத்து விவரங்களையும் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் மைக்ரோசிப் உள்ளடங்கும். இது உலகெங்கிலும் உள்ள எந்த விமான நிலையத்திலும் அவரது அடையாளத்தை உறுதி செய்யும் . இலங்கையர்கள் தற்போதைய கடவுச்சீட்டில் எதிர்கொள்ளும் சிரமங்களை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். எனினும், புதிய இ-பாஸ்போர்ட் மூலம், விமான நிலைய சோதனைகளின் போது நம் நாட்டைச் சேர்ந்த மக்கள் இனி இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்க மாட்டார்கள்,” என்றும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் 23 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ளவை பாதுகாப்பிற்காக பெறப்பட்டதாகவும் அமைச்சர் அலஸ் குறிப்பிட்டார். தற்போது, அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, உடனடி பயணத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து, திணைக்களம் ஒரு நாளைக்கு 1,000 பாஸ்போர்ட்டுகளை வழங்கி வருகிறது.