பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !
சில இடங்களில் எம்பி இளங்குமரன் வம்புக்கு அலைகிறவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !
நேற்றைய தினம் மார்ச் 27 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர், இளங்குமரன் கருணநாதன் தலைமையில் நடைபெற்ற சாவகச்சேரி பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம், பெரியளவிலான முரண்பாடுகள் இன்றி சுமூகமாக நடைபெற்று முடிந்தது. அவ்வப்போது எம்பி இளங்குமரனும் எம்பி அர்ச்சுனாவும் முட்டிக் கொண்டாலும் இருவரும் நகைச்சுவையோடு ஆக்கபூர்வமாக கூட்டத்தை நடத்தி முடித்தனர். எம்பி அர்ச்சுனா இராமநாதன் எப்பவும் போல மூச்சுக்கு முன்னூறுதரம் "நான் வைத்தியர், நீ பில் போடுகிறனி என மற்றவர்களின்" தொழிலை தரம்தாழ்த்தி கதைத்தார். எம்பி இளங்குமரனும் உடனடியாக துடுக்காக பதில் கொடுத்துக் கொண்டே இருந்தார். சில இடங்களில் எம்பி இளங்குமரன் வம்புக்கு அலைகிறவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்படி எம்பி இளங்குமரனும் எம்பி அர்ச்சுனாவும் வாயாடிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டியும் ஏற்பட்டது.
எம்பி இளங்குமரன் கருணாந்தன் தலைமை ஏற்று நடத்திய முதலாவது கூட்டம் சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற முக்கியமான தீர்மானத்துடன் முடிவடைந்துள்ளது. 60 கிராம சேவகர் அலுவலர் பிரிவை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு சாவகச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ' சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக ' பிரிக்க கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உட்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தனர்.
எம்பி அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலையை பிரச்சினைகளை முன்னிறுத்தியே மக்கள் மத்தியில் பிரபல்யமானார். அந்தவகையில் சாவகச்சேரிப் பிரதேசத்திலேயே அவருக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்து அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அதற்கேற்ப நேற்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு மக்களின் கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான கோரிக்கைகளை சாவகச்சேரி பதில் வைத்தியசாலைப் பணிப்பாளர் ரஜீவ் கோபாலமூர்த்தி முன்வைத்த போதுஇ அர்ச்சுனா தனது வழமையான குதர்க்க கேள்விகளை தவிர்த்துக் கொண்டு பொறுப்போடு நடந்து கொண்டார்.
வைத்தியர் ரஜீவ் கோபால மூர்த்தியின் நிர்வாகத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை தூய்மையாக உள்ளதாகவும் சிறப்பாக இயங்குவதாகவும் பாராட்டினார். அதேநேரம் எம்பி.இளங்குமரனும் மகப்பேறு மருத்துவர் உள்ளாரா? மகப்பேறு பிரிவு இயங்குகிறதா?, சத்திர சிகிச்சைப்பிரிவு இயங்குகிறதா? அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளார்களா? என உருப்படியான கேள்விகளைக் கேட்டு மக்களும் அறியும்படியாக தகவல்களைப் பெற்றுக் கொடுத்தார். ஒருவகையில் சாவகச்சேரி வைத்தியசாலை ஓரளவு சீராக இயங்க, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும் காரணம் என சாவகச்சேரி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டிய எம்பி இராமநாதன் அர்ச்சுனா, சில வாக்குறுதிகளையும் கொடுத்தார்.
மேலும் நேற்றைய சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அப்பிரதேச வீதி அபிவிருத்தி, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுப்பு, சாவகச்சேரி சந்தைத் தொகுதி கடைகள் குத்தகை விவகாரம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தனியார் காணிகள் கையகப்படுத்தப்பட்டு விற்கப்படும் விவகாரம் எனப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
IBC கந்தையா பாஸ்கரனின் 'றீச்சா' பண்ணைக்கு ஏக்கர் கணக்கில் வந்த காணிகளின் பின்னணி தொடர்பிலும் நிலவும் சர்ச்சையும் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தமிழர் எஸ்.கே. ரி. நாதன் கிளிநொச்சியில் முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் நடத்துகிற போர்வையில் விடுதலைப் புலிகளின் பராமரிப்பில் பாவணையில் இருந்த பெருந்தொகையான ஏக்கர் நிலங்களை ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவில் கையகப்படுத்தியிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சட்டவிரோதமாக மக்கள் காணிகள் அபகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமானதாகும்.