ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்துக் கொண்டு, ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும்.
ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்று நாங்கள் அரசியல் தீர்மானத்தை எடுப்பதில்லை. நாமல் ராஜபக்ஷ .
அரசியல் தீர்மானம் எடுக்க ஜனாதிபதியிடம் ஆலோசனை பெறுவதில்லை.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்தால் நாங்கள் எமது அரசியல் தீர்மானத்தை அறிவிப்பதாகக் குறிப்பிடுவது முறையற்றது.ஏனெனில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவதால் எமக்கு அரசியலில் எவ்வித பயனும் கிடைப்பதில்லை அதேபோல் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இடைக்கால ஜனாதிபதியாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம்.ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடையும்.அடுத்த ஜனாதிபதி பதவிக்கு தற்போதைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதாக நாங்கள் அவருக்கு வாக்குறுதி வழங்கவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.சிறந்த கொள்கைத் திட்டம் உள்ள தரப்பினருடன் கூட்டணியமைப்போம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்துக் கொண்டு நாங்கள் எமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும்.ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்று நாங்கள் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்மானங்கள் எடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எக்காரணிகளுக்காகவும் கட்சியின் கொள்கைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றார்.