அதிவிரைவு டோரா படகின் துணையோடு கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு - 6 பேர் கைது!
,

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளி பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (10) காலை கைது செய்யப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை (09) இரவு தொடக்கம் வியாழக்கிழமை காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளும் அங்குள்ள கடற்பரப்பு பகுதிகளும் சமநேரத்தில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் திடீரென சுற்றிவளைக்கப்பட்டன.
கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் பகுதிகளில் பல படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கடற்பரப்புக்கு கடற்படையின் படகுகள் அனுப்பப்பட்டு, காங்கேசன்துறையில் இருந்து அதிவிரைவு டோரா படகும் வரவழைக்கப்பட்டு, இக்கடற்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.