இலங்கையில் தற்போது ஒரு இலட்சம் பேரில் 25 தாய், சிசு மரணங்கள் பதிவாகின்றன.
தாய் - சிசு மரண எண்ணிக்கையை குறைத்து தரமான சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் - நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் தற்போது ஒரு இலட்சம் பேரில் 25 தாய், சிசு மரணங்கள் பதிவாகின்றன. அந்தவகையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய் சிசு மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது இந்நாட்டு சுகாதாரத் துறையில் அடையப்பட்ட ஒரு சாதனையாகும். ஆகையால் மரண எண்ணிக்கையை மேலும் குறைத்து தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபன இலங்கை அலுவலகத்தின் பதில் தலைவர் வைத்தியர் பரூக் குரேஷி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கிடையில், சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உலக சுகாதார தினம் வருடாந்தம் ஏப்ரல் 7 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இம்முறை ஆரோக்கியமான தொடக்கங்கள் நம்பிக்கையான எதிர்காலம் என்னும் விசேட தொனிப்பொருளுக்கமைய அனுஷ்டிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பல்வேறு பொது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் இம்முறை முன்மொழியப்பட்டுள்ள கருப்பொருளுக்கமைய கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிசு உயிரிழப்பைத் தடுக்கும் முகமாகவும், சர்வதேச சமூகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் துறையில் உள்ள நிபுணர்களின் பங்கேற்புடன் ஏப்ரல் 1ஆம், 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் இணையவழி சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதன்போது கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு, தாய்மார்களின் மனநலம் மற்றும் தாய்மார்களின் நல்வாழ்வு ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக் கருத்தரங்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுகாதார அமைச்சின் வேலைத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அவை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. தற்போதைய அரசாங்கம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அவர்கள் இந்நாட்டின் எதிர்கால உயிர்நாடி எனவே அவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைய கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிசு மரண வீதத்தை ஒரு இலட்சத்துக்கு எழுபதாகக் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
எனினும் தற்போது இலங்கையில் ஒரு இலட்சம் பேரில் 25 தாய், சிசு மரணங்கள் பதிவாகுகின்றன. அந்தவகையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய், சிசு மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை காணலாம். இது இந்நாட்டு சுகாதாரத் துறையால் அடையப்பட்ட ஒரு சாதனையாகும்.
நாட்டிலுள்ள அனைத்து சுகாதார நிபுணர்களின் வலுவான அர்ப்பணிப்பின் காரணமாக இத்தகைய திருப்திகரமான நிலையை அடைய முடிந்துள்ளது. ஆகையால் மரண எண்ணிக்கையை மேலும் குறைத்து தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் என்றார்.