ரணில் தரப்பினரின் செயற்பாடு காரணமாக அதிருப்தி! -பிரமித பண்டார தென்னக்கோன்.
.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி தொடர்பில் நாம் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன்(Pramitha Bandara Tennakoon) குறிப்பிட்டுள்ளார்.
சிலிண்டர் கட்சியிலுள்ள உறுப்பினர்களின் இவ்வாறான செயல் அருவருக்கத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,ஜனாதிபதித் தேர்தலின் போதும், பொதுத் தேர்தலின் போதும் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்து அதன் வெற்றிக்காக பாடுபட்டோம்.அவ்வாறிருக்கையில் எம் சார்பில் ஒருவருக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அதிருப்தியளிக்கின்றது.
சிலிண்டர் தொடர்பில் அதிருப்தியுடனேயே இருக்கின்றோம்.கிடைக்கப்பெற்ற இரு ஆசனங்களில் ஒன்றுக்கு தன்னிச்சையாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது.இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அக்கட்சியிலிருந்த பல சிரேஷ்ட பழைய அரசியல்வாதிகள் புதியவர்களுக்கு இடமளித்து அவர்கள் ஒதுங்கியுள்ளனர்.
அவ்வாறிருக்கையில் சிலிண்டரிலுள்ள உறுப்பினர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளமை அருவருக்கத்தக்கது.எவ்வாறிருப்பினும் இளம் அரசியல்வாதிகள் இணைந்து எவ்வாறு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.