Breaking News
தன் அன்னையிடமிருந்து விடைபெறும்போது நான் விரைவில் காற்றில் கலந்துவிடுவேன் என்று கூறுகின்றாள்
அதன் அர்த்தம் அப்போது அந்த அன்னைக்கு புரியவில்லை.
•அன்னையர் தின வாழ்த்துக்கள்!
பெண் போராளி ஒருவர் தன் அன்னையை காண செல்கிறார். அது இறுதி சந்திப்பு என்பது அந்த பெண் போராளிக்கு தெரியும். அன்னைக்கு தெரியாது.தன் அன்னையிடமிருந்து விடைபெறும்போது நான் விரைவில் காற்றில் கலந்துவிடுவேன் என்று கூறுகின்றாள் அதன் அர்த்தம் அப்போது அந்த அன்னைக்கு புரியவில்லை. ஆனால் அடுத்த நாள் தன் மகள் பெரிய யுத்தக்கப்பலை மூழ்கடித்து கடலில் கரைந்துவிட்டாள் என்ற செய்தியை அறிந்தபோது புரிந்து கொண்டார்.
அந்த பெண் போராளி 50கிலோ வெடி மருந்தை காவிக்கொண்டு 8 மணி நேரம் கடலில் நீந்திச் சென்று 6300 தொன் எடை கொண்ட ரோடார் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை மூழ்கடித்தார். இது பலரும் அறிந்த செய்திதான். ஆனால் இதன் பின்னால் ஆச்சரியம் தரும் இன்னொரு செய்தியும் உண்டு. தான் தற்கொடை தாக்குதல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு தனது தாக்குதல் நல்லூர் திருவிழா காலமாக இருக்க வேண்டும் என்று அப் பெண் போராளி விரும்பியிருக்கிறார். ஏனெனில் இவரின் தாயார் கடலை வியாபாரம் செய்பவர். திருவிழா காலத்தில் கடலை வியாபாரம் மூலம் தாயாரிடம் காசு இருக்கும். எனவே தன் நினைவு நாளில் வீட்டுக்கு வரும் தன் சக போராளிகளுக்கு தன் தாயாரால் அப்போது தேநீர் கொடுக்க முடியும் என அவர் நினைத்தார்.
ஒரு போராளி தன்னை தற்கொடையாக அர்ப்பணிப்பது மட்டுமன்றி தான் இறந்த பின்பு தன் வீட்டுக்கு வரும் சக போராளிகளுக்கு தேநீர் கொடுக்க தன் அன்னை சிரமப்படக்கூடாது என்பதுவரை எப்படி சிந்திக்க முடிகிறது? ஆம். போராட்டம் மகத்தானது.
குறிப்பு – ரஸ்சிய போராளியின் அன்னை ஒருவர் பற்றிய கதை நாவலே தாய். எம் போராட்ட வரலாற்றிலும் பல அன்னையர் கதைகள் உண்டு. ஆனால் அதை எழுத மார்க்சிம் கார்க்கிகள் எம் மத்தியில் இல்லை.