இஸ்ரேல் மற்றும் லெபனான் 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!
ஜனாதிபதியின் போர் உத்தரவு இந்த நிமிடம் வந்தாலும் அடுத்த நொடியே தாக்குதலை அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளும்!
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தற்காலிக போர்நிறுத்தம் கிழக்கு நேரப்படி (EST) இன்று மாலை 5 மணி முதல் அமுலுக்கு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அமைதியை ஏற்படுத்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் கூட்டுப் படைத் தளபதி டான் கெய்ன் ஆகியோருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பில் லெபனானில் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு குறித்து எந்தக் குறிப்பும் இடம் பெறவில்லை. இது, உலகளவில் தான் தீர்த்து வைக்கும் 10 ஆவது போர் என்றும், அமைதியை நிலைநாட்ட இது மிகமுக்கியமான நடவடிக்கை என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரான் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசப்படும்
இரான் ஆட்சியாளர்கள் சரியான முடிவை தேர்வு செய்ய வேண்டும் என்றும், மோசமான முடிவெடுத்தால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்லர் தெரிவித்தார். தமது இராணுவம் எந்நேரத்திலும் தயார்நிலையில் உள்ளதாகவும், ஜனாதிபதியின் போர் உத்தரவு இந்த நிமிடம் வந்தாலும் அடுத்த நொடியே தாக்குதலை அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளும் என மேலும் தெரிவித்துள்ளார்.


