இந்தியாவுக்கு வைத்த ‛டிமாண்ட்’.. பிரிக்ஸ் கரன்சியால் அலறும் அமெரிக்கா.. பின்னணியில் 3 முக்கிய காரணம்.
சர்வதேச அளவில் உள்ள முக்கியமான கூட்டமைப்புகளில் ஒன்று பிரிக்ஸ்.

அமெரிக்கா டாலரின் கதையை முடிக்க பிரிக்ஸ் கூட்டமைப்புகள் இணைந்து பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது அமெரிக்காவின் தூக்கத்தையே கொடுத்துள்ள நிலையில் ‛‛சர்வதேச அளவில் டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் முயற்சிக்கிறது. இதனை நாங்கள் ஒருபோதும் விரும்புவது இல்லை'' என்று இந்தியாவை குறிப்பிட்டு அமெரிக்கா கூறியுள்ளது.
சர்வதேச அளவில் உள்ள முக்கியமான கூட்டமைப்புகளில் ஒன்று பிரிக்ஸ். இந்த கூட்டமைப்பில் முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் மட்டுமே இருந்தன. இப்போது கூடுதலாக 5 நாடுகள் இணைந்துள்ளன.
அதன்படி எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன. இதனால் பிரிக்ஸ் நாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதாவது உலகம் முழுவதும் நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் என்பது பெரும்பாலும் அமெரிக்க டாலரில் தான் நடக்கிறது. இதற்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வந்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி வணிகம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.
பிரிக்ஸ் கரன்சி வந்துவிட்டால் பலநாடுகள் அதனை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம். இதனால் அமெரிக்கா டாலரின் பயன்பாடு சரியும். மதிப்பும் உலகளவில் குறையும். இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தான் பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரக்கூடாது என்று அமெரிக்க கதறி வருகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப், ‛‛பிரிக்ஸ் கரன்சியை யாரும் கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் அமெரிக்கா உடனான உறவை மறந்துவிட வேண்டும்'' என்று கூறினார்.
இதையடுத்து நம்நாடு மற்றும் ரஷ்யா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ‛பிரிக்ஸ்' கரன்சி உருவாக்கும் திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அமெரிக்கா விடுவதாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் பிரிக்ஸ் கரன்சி என்பது டாலரின் மதிப்பை குறைத்து விடுமோ என்ற அச்சம் தான். அதுமட்டுமின்றி இந்த கூட்டமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக உள்ள ரஷ்யா, சீனா உள்ளிட்ட 2 வல்லரசு நாடுகள் உள்ளன. அதேபோல் உலகின் 5வது பெரிய நாடான இந்தியாவும் உள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் தான் ‛இந்தியா டூடே'செய்தி நிறுவனம் சார்பில் நடந்த ‛2025 இந்தியா டூடே கான்கிளேவ்' நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் பங்கேற்று பேசினார். அப்போது அவரும் ‛பிரிக்ஸ்' கரன்சி தொடர்பான கவலைகளை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி ஹோவார்ட் லுட்னிக் கூறுகையில், ‛‛பிரிக்ஸ் (BRICKS)நாடுகளில் இருக்கும் ஐ (I) என்ற எழுத்து இந்தியாவை குறிக்கிறது. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்கா டாலருக்கு மாற்றாக சர்வதேச அளவில் மாற்று கரன்சியை கொண்டு வர முயற்சிக்கிறது. இத்தகைய செயலை நாங்கள் ஒருபோதும் விரும்புவது இல்லை. இது இந்தியா மீதான அன்பு மற்றும் உறவை உருவாக்குவது இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வர்த்தகம் மிகவும் நியாயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்'' என்றார். இதற்கிடையே தான் நம் நாடு ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டது. பிரிக்ஸ் கரன்சி என்பதை உருவாக்கும் திட்டம் இல்லை என்று கூறிவிட்டது. கடந்த 5ம் தேதி கூட ஜெய்சங்கர் பிரிக்ஸ் கரன்சி உருவாக்கும் திட்டம் இல்லை. இந்த கரன்சி உருவாக்கும் முடிவுக்கு ஒருங்கிணைப்பு எதுவும் இல்லை என்று கூறினார்.
இந்தியா பலமுறை இதுபற்றி வெளிப்படையாக கூறினாலும் கூட அமெரிக்கா தொடர்ந்து அச்சப்படுவதன் பின்னணியில் முக்கிய 3 காரணங்கள் உள்ளன. இதில் முதலாவது காரணம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இருபெரும் வல்லரசுகளாக ரஷ்யா, சீனா உள்ளிட்டவை பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளன. அமெரிக்கா இப்போது பல நாடுகளுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அதிகவரியை விதித்துள்ளது. இப்போது ரஷ்யாவுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டுகிறது. ரஷ்யாவும், அமெரிக்காவை முழுவதுமாக நம்பாது.அதேபோல் இந்தியா, சவுதி, பிரேசில் உள்ளிட்ட பணபலம் படைத்த நாடுகளும் உள்ளன. இதனால் ‛பிரிக்ஸ்' கரன்சி மூலம் அமெரிக்கா டாலருக்கு செக் வைத்து விடுவோர்களோ என்ற அச்சம் உள்ளது. 2வது காரணம் என்பது பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ரஷ்யா, ஈரான் நாடுகள் மீது அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இருநாடுகளும் கடுமையாகன பாதிப்பை சந்தித்து வருகின்றன. உக்ரைன் போரால் அமெரிக்கா தான் முதலில் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து தனிமைப்படுத்தியது. அதேபோல் தங்களுடன் மோதியதால் ஈரான் மீதும் அமெரிக்கா நீண்டகாலமாக பொருளாதார தடைகளை விதித்தது. இப்படி 2 நாடுகள் அமெரிக்கா பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலை தந்துள்ளது. இதனால் நம்மை பழிவாங்க பிரிக்ஸ் கரன்சி வந்துவிடுமோ என்ற பயம் அமெரிக்காவிடம் உள்ளது. இதற்குஅடுத்தப்படியாக 3வது காரணம் என்பது சில நாட்களுக்கு முன்பு பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவின் சமீபத்திய கருத்து தான். அதாவது ‛‛அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர பிரிக்ஸ் நாடுகள் உறுதி கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே பணம் செலுத்துவதற்கான மாற்று பிளாட்பார்மை ஏற்படுத்தும் முயற்சியை அது ஒருபோதும் தடுக்காது'' என்று பிரேசில் அதிபர் கூறியிருந்தார். ரஷ்யா, இந்தியா பிரிக்ஸ் கரன்சி உருவாக்கும் திட்டம் இல்லை என கூறும் நிலையில் பிரேசில் அதிபர் இப்படி கூறியதால் அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் தான் தொடர்ந்து பிரிக்ஸ் கரன்சியை பிரிக்ஸ் நாடுகள் உருவாக்க கூடாது என்று கதறி கொண்டே இருக்கிறது அமெரிக்கா.