நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?: இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் இல்லை
.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயாதீனக் குழுவொன்று கட்டுப்பணத்தை கடந்த சனிக்கிழமை (30) செலுத்தியது.
இந்த வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய முதலாவது குழு இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் முழுக்கவனமும் மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு பக்கம் திரும்பியுள்ளது.
மலையகத்தை பொறுத்தவரை கிட்டதட்ட எட்டு மலையக பிரதிநிதிகள் இம்முறையும் போட்டியிடுகின்றனர்.
இதில் மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் சஜித் கூட்டணியில் களத்தில் இறங்கவுள்ளனர்.
ஜீவன் தொண்டமான், ரமேஷ் ஆகியோர் சேவல் சின்னத்தில் தனிவழி செல்லவுள்ளதாகவும், வேறு சிலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் பின்வாங்கியமையினால் தனிவழியாக சேவல் சின்னத்திலிலேயே இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுத்தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்ககுவது தொடர்பாக நாளை(01) இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.
வேலுகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் ஆகியோர் பொது சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் களமிறங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் களநிலவரம்
மனோ கணேசன் கொழும்பிலும், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் நுவரெலியாவிலும் களமிறங்கவுள்ளனர். அநேகமாக திகாம்பரம் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியை கைப்பற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். ஆகவே ஜீவன் தொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் இடையே பலத்த போட்டித்தன்மை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதொகா சேவல் சின்னத்தில் களமிறங்கி வெற்றிபெற்றது. அதன்பின்னர் இம்முறையே பொதுத்தேர்தலொன்றில் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த வேலுகுமார், கண்டி மாவட்டத்தில் ஐதேக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகின்றார்.
அரவிந்தகுமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இக்கூட்டணியின்கீழ்தான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களின் உறுதியான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் களமிறங்கும் கூட்டணி, சின்னம் தொடர்பான விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைந்துள்ளது. அதேபோல தமிழரசுக் கட்சியும் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தொடர்பில் பரிசீலித்துவருகின்றது.
மனோ கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த குருசாமியும் கொழும்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதில் முற்போக்கு கூட்டணிக்கு கடும் சவால் உள்ளது. இதொகாவும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
களுத்துறையில் எம்.பிக்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரித்துள்ளது. அங்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு முற்போக்கு கூட்டணியும், இதொகாவும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபடும் என்பதில் ஐயமில்லை.
கண்டி மாவட்டத்தில் முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஒருவரை நிறுத்தக்கூடும் அல்லது சஜித் அணியில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கக்கூடும். இதனால் கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பதிலும் இம்முறை கடும் போட்டி நிலவக்கூடும்.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ்ப் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெல்வதற்குரிய வாய்ப்பு இருந்தும், தமிழ்க் கட்சிகளின் தனிவழி பயணத்தால் அது தொடர்ச்சியாக கை நழுவி வருகின்றது.
இம்முறை குறித்த மாவட்டங்களில் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்குவார்களா என்பது தொடர்பில் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.