உரிமைகளை பெறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கரம் சேர்ப்போம்!
.
உரிமைகளை பெறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கரம் சேர்ப்போம்!
இழந்துநிற்கின்ற உரிமைகளை பெறுவதற்கு ஒன்றாக குரல் கொடுப்போம். அதற்கு ஆரம்ப புள்ளியாக எமது பெருந்தலைவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியினை கையில் எடுப்போம் என்று முன்னாள் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்றுவந்த ஆட்சிமுறைக்கு தலைமை வகித்த இரண்டு படரும் கொடிகள் முக்கியமானது. அதவாது ஐக்கியதேசியகட்சியின் ஆரம்பத்தில் தொடங்கி சுதந்திரகட்சியாக பிரிந்து பின்னர் வெவ்வேறு வடிவங்களில் ஒரேகொடியில் பூத்த மலர்களாகத்தான் அந்த ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். அந்த கொடிகளுக்கு அவ்வப்போது துணைகொடுத்த செடியாக புறத்தே நின்று புதியமலராக தற்போதைய ஜனாதிபதி கிடைத்திருக்கின்றார்.
இங்கு நடைபெற்று முடிந்த தேர்தல் நிறைவேற்று அதிகாரத்தைகொண்ட ஒரு தனிநபரை உருவாக்குவதற்கான தேர்தலே அன்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிறுவுவதற்காக சட்டத்தீர்மானங்களை எடுக்கும் பாராளுமன்ற அதிகாரம் வழங்கப்படவில்லை.
எனவே ஒரு தூய பாராளுமன்றத்தை உருவாக்கவேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அடுத்த பாராளுமன்றுக்காக தூய உறுப்பினர்களை தேடுகின்ற இந்த நாட்டில் கடந்த 10வருடங்களுக்கு மேலாக தூய அரசியலை நாட்டில்கொண்டுவரவேண்டும் என்று முன்னின்று உழைத்த நாங்கள் இன்று களம் இறங்கியிருக்கின்றோம்.
அதேபோல தூய அரசாங்கத்தை அமைப்பதற்கு தூய எதிர்க்கட்சியும் அவசியம். அதனை நிரப்புவதற்கு வடகிழக்கு மலையகப்பகுதிகளில் வாழ்கின்ற தமிழ்முஸ்லீம் சமூகம் உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்கவேண்டும். நாங்கள் இழந்துநிற்கின்ற உரிமைகளை பெறுவதற்கு ஒன்றாக குரல் கொடுப்போம்.
அதற்கு ஆரம்ப புள்ளியாக எமது பெருந்தலைவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியினை கையில் எடுப்போம். எங்கும் ஒளி பரவட்டும்.
இதேவேளை சங்குசின்னம் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற விளக்கத்தினை அவர்கள் சொல்லவேண்டும். அவர்கள் ஜனாதிபதித்தேர்தலில் போட்டுயிடும் போதும் எங்களோடு உரையாடப்படவில்லை. அந்ததேர்தலில் மாத்திரமே சங்கு சின்னம் பயன்படுத்தப்படும அதன் பின்னர்பயன்படுத்தப்படாது என்று சொல்லப்பட்ட கருத்தும் எனக்கு நினைவில் உள்ளது.மீண்டும் அது பொதுத்தேர்தலில்பயன்படுதப்படுவது தொடர்பில் எந்த ஒரு விளக்கமும் எமக்குத்தெரியாது.
தமிழர் விடுதலைக்கூடணியின் வரலாறு சங்கு கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்கு தெரியாதது அல்ல. எனவே எந்த இடத்திலிருந்து எந்தபுள்ளியை ஆரம்பிப்பது என்பது கருத்துநிலை தொடர்பானது. ஆனால் அவர்களும் இந்த கூட்டணிக்கு வரலாம். நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு புதிய கூட்டணி பற்றி சிந்திக்கலாம்.
இலங்கை தற்போது சுதந்திரமடைந்தது போன்ற புதிய நிறைவேற்று அதிகாரத்தை கண்டுள்ள காலகட்டத்தில் நாங்கள் புதிய இலங்கையை பார்ப்பதற்கு புதிய நாளைத்தொடங்கவேண்டும். அதற்கு உதயசூரியன் பொருத்தமான சின்னம் என நினைக்கிறேன். அதனை சங்கு ஊதி நிறுத்த வேண்டாம் என்றும் நினைக்கிறேன். என்றார்.