உங்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்கிறோம் என்ற தொனியில் ஜெய்சங்கர் பேசிவிட்டு போயிருக்கிறார்.
காலையில் வந்திறங்கியது தொடக்கம், முன்னிரவில் புறப்பட்டுச் செல்லும் வரை, சந்திப்பு,
ஜெய்சங்கரும் தமிழ்க் கட்சிகளும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டாவது முறையாக அந்தப் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், கடந்த ஜூன் 20ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்புக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனை ஒரு அவசர பயணம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் அரை நாள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்தார். அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளும் போது, குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது தங்கியிருப்பது வழக்கம். ஆனால் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் அவ்வாறானதாக இருக்கவில்லை. அதேவேளை, அவரது பயணம் இறுக்கமான நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலையக தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று அவர், காலையில் வந்திறங்கியது தொடக்கம், முன்னிரவில் புறப்பட்டுச் செல்லும் வரை, சந்திப்பு, சந்திப்பு என்றே ஓடிக் கொண்டிருந்தார்.
வியாழக்கிழமை மாலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனான சந்திப்பு ஒழுங்கும், நடந்த விதமும் வேறுபட்டதாக இருந்தது. முன்னர், இந்திய பிரமுகர்கள் வருகின்றபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளையும் கூட, தனித்தனியாக சந்திக்கும் வழக்கம் இருந்தது. அதேவேளை பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமான அழைப்பாகவும் இருந்தது. ஆனால் இந்த முறை அப்படியில்லை. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் அவர் சந்திப்புக்கு அழைத்திருக்கிறார்.
வேறு வேறாக அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில், எல்லோருடனும் ஒன்றாகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பை முன்னெடுத்திருக்கிறார்.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோருடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்த போதும், அவர் உடல் நிலை காரணமாக பங்கேற்கவில்லை. சந்திப்பில் பங்கேற்றவர்களில், மாவை சேனாதிராசா தவிர மற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
சம்பந்தன் பங்கேற்காத நிலையில் தான், கிழக்கின் பிரதிநிதியாக சாணக்கியன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் நடந்த அந்த சந்திப்பில், ஆரோக்கியமான ஒரே விடயம், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒரே மேசையில் அமர வைத்தது தான்.
முன்னர் ஒன்றாக இயங்கியவர்கள், தனித்தனியாக பிளவு பட்டு இப்போது நவக்கிரகங்கள் போல, ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பார்க்காமல் செயற்படுகிறார்கள்.
ஒரு சந்திப்புக்காக இவர்கள் அனைவரையும் ஒரே மேசையில் அமர வைப்பது என்பது, இன்று நடக்க முடியாத ஒரு அதிசயமாக மாறிவிட்டது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் சாராத, பொது விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அழைக்கப்பட்ட போது கூட, இவர்களில் ஒரு சிலர் முகம் காட்ட மறுத்திருக்கிறார்கள்.
தமிழ் தேசிய கட்சிகள் என்று கூறிக் கொண்டாலும், இவர்களுக்கிடையில் தோன்றியிருக்கும் விரிசல்கள் ஒட்ட வைக்க முடியாதவையாக மாறி இருக்கின்றன.
இந்த சூழலில் ஜெய்சங்கர் முன்னிலையில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் எட்டுப்பேர் ஒன்றாக அமர்ந்திருந்தது அரிய நிகழ்வு தான். மற்றபடி இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானது என்றோ, நம்பிக்கை தரக்கூடியது என்றோ கூறக் கூடியதாக இருக்கவில்லை.
ஏனென்றால் இந்த சந்திப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மிகக் குறுகியது. இந்த குறுகிய நேரத்துக்குள் சந்திப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை கூறுவதற்கு இரண்டு, மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன.
சிலர் அதில் இரண்டு மடங்கு நேரத்தையும் விழுங்கிக் கொண்டனர். அதனால் இவர்களின் கருத்து வெளிப்பாட்டுக்கே, சந்திப்புக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெரும்பகுதி முடிந்து போனது.
இரண்டாவது, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளின் கருத்துக்களை செவி மடுக்கும் நோக்கில், இந்த சந்திப்பை மேற்கொண்டிருக்கிறாரே தவிர, அவர்களுக்கு ஆக்கபூர்வமான பதிலை கொடுக்கின்ற அல்லது புதிய செய்தி ஒன்றை வழங்குகின்ற சந்திப்பாக இதனை முன்னெடுத்திருக்கவில்லை.
அதனால் அவரிடம் இருந்து புதிய பதில் ஒன்றை தமிழ் கட்சிகளால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
உங்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்கிறோம் என்ற தொனியில் அவர் பேசிவிட்டு போயிருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மாத்திரம், தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பான ஒரு மூன்று பக்க ஆவணத்தை கையளித்திருக்கிறார்.
13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பாக இந்த சந்திப்பில் பேச்சு வந்த போது, அது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்றும் அதனை தாங்கள் நிராகரிப்பதாகவும் கஜேந்திரன் மாத்திரம் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மக்களின் இறைமை, தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றே கிடைக்க வேண்டும் என்றும், போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்று நீதியை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர், இந்தச் சந்திப்பின் போது ஜெய்சங்கரிடம வலியுறுத்தி இருந்தார். அவரிடம் கையளித்த அறிக்கையிலும் அதனை குறிப்பிட்டு இருந்தார்.
13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பாக இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அதேவேளை, இன்னும் சிலர் இது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக இருக்காது என்றும் கூறியிருக்கிறார்கள்.
சஜித் பிரேமதாசவும், அநுர குமார திசாநாயக்கவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டபோது, காணி, பொலிஸ் அதிகாரங