“திசைகாட்டி வெற்றி பெற மக்களே அதிகம் பாடுபடுகின்றனர்“; அனுர
.
மக்களின் நோக்கமும் ஆட்சியாளர்களின் நோக்கமும் ஒன்றாக உள்ள அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடு அனுரவிற்கு எனும் தொனிப்பொருளில் மாலம்பேயில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கமைய அமைக்கப்படும் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம்.
நாட்டு மக்கள் பல வருடங்களாக தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதாக கூறி ஒன்றரை வருடங்களாகின்றன.
ஆனாலும் நடத்தப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் இயன்றவரை முயற்சித்தது. ஆனாலும் முடியவில்லை.
முன்பு வாக்கெடுப்பு நடத்தும் போது ஆட்சியாளர் அதில் ஆர்வம் காட்டினார்கள், ஆனால் இன்று ஆட்சியாளர் வாக்குகளால் சலிப்படைந்துள்ளனர். நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு வாக்களிக்கும் தேவையுள்ளது.
வாக்களிக்க இன்னும் குறுகிய காலமே உள்ளது. திசைகாட்டி வெற்றி பெற பாடுபடுவோம். நாம் திட்டமிட்டு செய்த பணியை விட மக்கள் எம்மை வெற்றிப்பெறச் செய்வதற்கு அதிக வேலை செய்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. இலங்கையில் முதன்முறையாக மக்கள் வாக்களிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதும் வீணாகாது என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். அந்த நம்பிக்கையும் அவ்வாறே பாதுகாக்கப்படும்.
கடந்த காலங்களில் அரசுகள் அமைக்கப்படும் போது மக்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது, ஆனால் ஆட்சியாளர்களுக்கு வேறு நோக்கம் இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பும், ஆட்சியாளரின் எதிர்பார்ப்பும் வேறு. மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்” என்றார்.