பிரான்ஸ் அரசாங்கம் இவ்வாரம் பதவி நீக்கம் செய்யப்படலாமென எதிர்பார்ப்பு
.
பிரதமர் மைக்கேல் பார்னியர் (Michel Barnier) தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. பிரான்ஸ் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.இந்த நிலையில், அங்கு அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், மைக்கேல் பார்னியர் தமக்கான சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனையடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்படுமாயின் 1962 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் வெளியேற்றப்பட்ட முதல் பிரான்ஸ் அரசாங்கமாக இது கருதப்படும்.