விஜய் முதலமைச்சரானது பற்றிய : சிரித்துக் கொண்டே சென்ற ரஜினிகாந்த்!
ரஜினியின் சிஷ்யனாக தன்னை அடையாளப்படுத்தி, திரையுலகில் வலம் வந்த விஜய்!
ரஜினியின் சிஷ்யனாக தன்னை அடையாளப்படுத்தி, திரையுலகில் வலம் வந்த விஜய், கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு பிறகு பெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
விஜய் முதலமைச்சராக பதவியேற்றது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், அதற்கு அவர் பதிலளிக்காமல் சிரித்துக் கொண்டே சென்ற வீடியோ தீயாக பரவி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக, தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து, பின்னர் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் கோலோச்சி வந்த திமுக, அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற, கடந்த காலங்களில் எத்தனையோ மாற்றுக் கட்சிகளும், முன்னணி நடிகர்களும் அரசியல் களத்தில் இறங்கினர். ஆனால், அவர்கள் அடுத்தடுத்து காணாமல் போனதுதான் இதுவரை வரலாறாக இருந்தது. ஆனால், அந்த வரலாற்றினை தனது முதல் தேர்தலிலேயே மாற்றிக் காட்டியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
இது ஒருபுறம் இருக்க, விஜய் முதலமைச்சராக பதவியேற்றது முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய பேச்சுகள் சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, கடந்த 90 காலக்கட்டங்களில் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட அரசியலில் குதிக்கும் சூழல் உருவானது. அந்த சமயத்தில், ரஜினிகாந்துக்கு இருந்த ரசிகர்கள் கூட்டமும், மக்கள் செல்வாக்கும் இப்போது இருந்ததை விட பல மடங்கு அதிகம்.
இருந்தபோதிலும், ஏதோ காரணத்துக்காக அன்றைக்கு ரஜினி அரசியலுக்கு வரவில்லை. தமிழக அரசியல் களத்தில் அன்று அரங்கேறி இருக்க வேண்டிய மாற்றங்கள், நிகழாமலேயே போனது. அதற்கு பிறகும், 2020-இல் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து, தனது உடல்நிலையை காரணம் காட்டி தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.
இதையும் படிங்க: எங்கள் அரசியல் அனுபவத்தை பகிர தயாராக உள்ளோம் - முதலமைச்சர் விஜய்யை நேருக்கு நேர் பார்த்து கூறிய உதயநிதி இந்த சூழலில்தான், ரஜினியின் சிஷ்யனாக தன்னை அடையாளப்படுத்தி திரையுலகுக்கு நுழைந்த விஜய், கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு பிறகு அந்த மாற்றத்தை தற்போது நிகழ்த்தி காட்டியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு இன்று புறப்பட்டார். அங்கிருந்து அவர் ரிஷிகேஷ் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம், விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளது பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால், அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் எந்த பதிலும் சொல்லாமல், கையெடுத்து கும்பிட்ட படி சிரித்துக் கொண்ட அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய விஜய், ரஜினியை மறைமுகமாக விமர்சித்ததாக ஒரு பேச்சு அடிபட்டது. ரஜினியின் முந்தைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, விஜய் அவ்வாறு பேசினார் என அவரது ரசிகர்கள் அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.


