எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் விவாதம்.
சஜித்- அநுர நேருக்கு நேர் விவாதம்: திகதியை அறிவித்தது ஜே.வி.பி
அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை நேற்று திங்கட்கிழமை கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் ஏழு, ஒன்பது, பதின்மூன்று மற்றும் பதின்நான்காம் திகதிகளில் விவாதத்தை நடாத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியான திகதியொன்று நிர்ணயிக்கப்பட்டதன் பின்னரே விவாதத்திற்கான இடம், நேரம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி போன்ற தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாத பட்சத்தில் அறிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.விவாதத்திற்கான திகதி நிர்ணயிக்கப்படாமையின் காரணமாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அனுரகுமார திஸாநாயக்கவுடனான பகிரங்க விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சுனில் ஹந்துன்நெத்தி விடுத்த பகிரங்க விவாத்தை ஏற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதென அறிவித்தனர்.எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் எந்தவொரு பகிரங்க விவாத்திற்கும் தாம் தயார் என பொதுவெளியில் அறிவித்துள்ளார்.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இந்த திகதி தொடர்பான அறிவிப்பு தற்போது சூடுபிடித்துள்ளது.