ஜனாதிபதி அநுரகுமாரவிடம் அரியநேத்திரன் விடுத்த கோரிக்கை!
.
புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கின்றேன்.
பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய வேட்பாளராக என்னை நிறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றுத்தந்த நிலையில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளன. அதற்கு இந்த மக்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் என்ற வகையில் அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
அதில் இரண்டாவதாக நாங்கள் பார்க்க வேண்டியிருப்பது இணைந்த வடக்கு, கிழக்கில் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். இணைந்த வடக்கு, கிழக்கே தமிழர்களின் அரசியல் தீர்வு என்பதனை இந்த தேர்தல் வெளிக்காட்டி இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து இருந்தாலும் கருத்து முரண்பாடுகள் காரணமாக சில பிரசாரங்களை மேற்கொண்டாலும் கூட இனிவரும் காலங்களில் அந்த முரண்பாடுகளை தவிர்த்து பாராளுமன்ற தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஓர் அணியில் ஒரு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.