சௌதியில் பெருந்துயரம்: பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இந்திய பக்தர்கள் 42 பேர் பலி!
பேருந்தில் 11 குழந்தைகள், 20 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் பயணித்ததாக தெரிகிறது.
சௌதி அரேபியாவில் இந்தியாவைச் சேர்ந்த உம்ரா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்தனர்.
சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த 43 பேர் உம்ரா பயணத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் உம்ரா பயணத்தின் ஒரு பகுதியாக மதீனாவில் இருந்து மெக்காவுக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) இரவு 11 மணியளவில் (சௌதி நேரப்படி) மெக்காவில் இருந்து மதீனா நோக்கி சென்று கொண்டிருந்த போது முப்ரிஹத் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது பயணிகளின் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த பேருந்தில் 11 குழந்தைகள், 20 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் பயணித்ததாக தெரிகிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே தப்பி பிழைத்ததாகவும், மீதமுள்ள அனைவரும் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தை ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதிபடுத்தி இருக்கிறது. மேலும் 24/7 கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களையும் அறிவித்திருப்பதாக, தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இத்துயர சம்பவத்திற்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சௌதி அரேபியாவின் மதீனாவில் இந்தியர்கள் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் இரண்டும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுக்கு முழு ஆதரவை அளித்து வருகின்றன. குடும்பத்தினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முதற்கட்ட தகவல்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களில் மல்லேபள்ளியைச் சேர்ந்த 16 பேர் மற்றும் டோலி சௌக், தப்பச்சபுத்ரா, ஆசிஃப் நகர், கோஷா மஹால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் உள்ளூர் பயண நிறுவனங்கள் மூலமாக தங்கள் புனித பயணத்தை முன் பதிவு செய்ததாக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் 45 பேர் அல் மெக்கா டூர்ஸ் & டிராவல்ஸ் மூலமாகவும், பலர் மல்லேப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பயண நிறுவனம் மூலமாக பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்த முழுமையான விவரங்களை சேகரித்து கொடுக்குமாறு தெலங்கானா மாநிலத் தலைமை செயலாளர் ராமகிருஷ்ண ராவ், டெல்லியில் தெலங்கானா மாநில குடியிருப்பு ஆணையர் கௌரவ் உப்பலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


