Breaking News
உலக தொழிலாளர் தினம்.
மே தினமும்
உலக தொழிலாளர் தினம்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர்தினம் போல் இரத்தமும் சதையும் உணர்வும் எழுச்சியுமான மே தினமும் ஒரு சடங்காக ஆக்கப்பட்டுவிட்டது. ஆதியும் அந்தமுமற்று விரிந்துகொண்டேயிருக்கும் அண்டவெளியில் பல்லுயிர்கள் வாழ தகுதியுள்ள ஒரே ஒரு கிரகமாக, அண்டவெளியில் கடுகாக இருக்கும் பூமி மட்டுமேயிருக்கிறது. பூமியில் இருக்கும் கோடானுகோடி உயிர்களில் பரிணாம வளர்ச்சியில் உச்சம் தொட்ட உயிராக மனிதன் இருக்கிறான். அறிவில்-படைப்பில் மனிதனின் ஆற்றல் எல்லையற்று விரிந்து கொண்டேயிருக்கிறது. உணவுக்காக மட்டுமே உழைப்பு என்ற அனைத்து உயிர்களுக்குமான பொதுவிதி மனிதனுக்கு பொருந்தாமல் போய்விட்டது. விலங்கிலிருந்து "மனிதன்" என்ற சமூக நிலையை, உணவு - உடை-உறையுள் மாற்றங்களின் மூலம் மனிதன் உருவாக்கிக் கொண்டான். இந்த மாற்றத்தின் அடிப்படையாக மனிதனின் ஆறாம் அறிவு இருக்கிறது. புலி - சிங்கம்-யானை போன்ற பெரிய உயிர்கள் முதல், புழு- எறும்பு - பூச்சி வரையான சிறிய உயிர்கள் வரை ஒவ்வொரு இனமும் தனக்கான உயிர் இயல்பை ஒரே மாதிரியாக ஆண்டிருக்கிறது.ஆனால் மனிதனின் உயிரியல்பு "சமூக வாழ்கையோடு" பிணைக்கப்பட்டு, ஒவ்வொரு மனிதனும் மற்ற உயிர்களை போல்-தனக்கான உயிரியல்பை தானே கொள்ள முடியாமல் - தன் மீது திணிக்கப்பட்ட இயல்பை கொண்டு உயிர்வாழ்கிறான். மனிதனின் ஆறாம் அறிவு, வியத்தகு அறிவியல் வளர்ச்சியை விரித்துக்கொண்டேயிருப்பதோடு மட்டுமல்லாமல், தன்னினத்தை தானே சுரண்டும் சுரண்டலையும் விரித்துக்கொண்டேயிருக்கிறது. இந்த பூமிப்பந்தில் எந்த நாட்டில், எந்த கண்டத்தில், எந்த மூலையில் இருக்கும் மனிதனிடமும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஒரு நொடியில் காணொலியில் பார்த்துக்கொண்டே பேசலாம்.
கடல்-மலைகளை கடந்து கண்டங்களை தாண்டலாம்-நில வில் இறங்கலாம் என மனிதனின் அறிவியல் விரிந்துகொண்டேயிருக்கிறது. அதேநேரத்தில் "சமூக மனிதன்" என்ற மாண்பு ஆகப்பெரும்பாலான மக்களுக்கு, இயல்பான கிடைத்தலாக இல்லாமல்-மறுக்கப்பட்டு- அதை பெறுவதற்கான இடைவிடாத போராட்டமாக ஆகிஇருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்ற அறிவு, அவனுக்கான வரமாக இல்லாமல் சாபமாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியை மனிதனில் இருக்கும் முதலாளியம் எனும் சின்னம் சிறு குழு தன்வயமாக்கிக் கொண்டு இயற்கை வளங்களை வகைதொகையின்றி அழிப்பதோடு மட்டுமல்லாமல், ஆகப் பெரும்பாலான மக்களை உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கி வருகிறது.
அரசு-அரசாங்கம் - இராணுவம் இவற்றின் மூலமாக மக்களை அடக்கி சுரண்டுவதோடு மட்டுமின்றி, தேசபக்தி போன்ற உளவியல்களை ஊட்டியும் அடிபணிய செய்கிறது. இத்தனையையும் மீறி, வகைதொகையற்றஉழைப்பு சுரண்டலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள உழைக்கும் வர்க்கம் வரலாற்றில் நிமிர்ந்தெழுந்தது. ஈடு இணையற்ற ஈகத்தாலும் போராட்டத்தாலும் "அடிமை" என்ற நிலையிலிருந்து" தொழிலாளி" என்ற நிலையை அடைந்தது. கதிரவன் உதித்து கதிரவன் மறையும்வரை உழைப்பு என்பதை உடைத்து, எட்டுமணி நேர உழைப்பு-எட்டுமணி நேர ஓய்வு-எட்டுமணி நேர உறக்கம் எனும் அடிப்படை உரிமையை அடைந்தது. அந்த உரிமைப் போராட்டத்தின் உன்னத நாளே" மே" நாள். மே நாள் மனிதகுல வரலாற்றை புரட்டிப்போட்ட நாள். ஆகப்பெரும்பாலான மக்களுக்கு மாண்பைக்கொடுத்த நாள். எண்ணற்றோர் குருதியும் உயிர்களும் மண்ணில் புதைந்து மலர்ந்த நாள். அந்த மகத்தான நாள் கொடுத்த போர்குணம் நீர்த்து வருவதால், சுரண்டப்பட்ட வரலாறு மீண்டும் வருகிறது. எட்டுமணி நேர வேலை என்பது மங்கி, மீண்டும் பத்துமணிநேரம் - பன்னிரெண்டு மணிநேரம் என்பது பரவி வருகிறது. நேரடி உற்பத்தி முறையில் இருக்கும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றும் மூளை உழைப்பு தொழிலாளர்களும் 12 மணிநேரத்தை தாண்டியும் கூட சுரண்டப்படுகிறார்கள்.
பெரும் பெரும் தொழிற்சாலைகளில் நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் சுருங்கி, ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை பல மடங்கு பெருகி ஆகப்பெரும் உழைப்பு சுரண்டல் பெருகிக்கொண்டேவருகிறது. தொழிற்சங்க உரிமை உயிர்ப்புடன் இருக்கும் அசோக் லேலேண்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், டிவிஎஸ்-டாடா - இந்துஸ்த்தான்-கேட் டர்பில்லர் போன்ற பெருநிறுவனங்களிலும் நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கையை விட, ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி வருகிறது. நிரந்தர தொழிலாளிக்கு கொடுக்கப்படும் சம்பளமே, அதே உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தையும் தீர்ப்புகளையும் மயிரளவிற்கு கூட எந்த நிறுவனமும் மதிப்பதில்லை. நிரந்தர தொழிலாளருக்காக இருக்கும் சங்கங்களும் போராடி பெற்ற உரிமைகளை விற்றுப் பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் மட்டுமன்றி அரசுத் துறை நிறுவனங்களிலும் இதே நிலை பரவி வருகிறது.விரல்விட்டு எண்ணக்கூடிய அம்பானி - அதானி - இந்துஜா - டிவிஎஸ்-டாட்டா போன்ற முதலாளிகளின் சொத்து மதிப்பு பல்லாயிரம் மடங்காக பெருகிவருகிறது.பல நூறு கோடி மக்களின் சமூக வாழ்க்கை உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகி நாளும் நாளும் மோசமாகி வருகிறது. அழிவுசக்திகள் அழியும் என்பது இயற்கை விதி. டைனோசர் ஒரு எடுத்துக்காட்டு. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் என்றார் மாமேதை காரல்மார்க்ஸ்.
முதலியத்தின் சவக்குழியில்தான் மாண்பான மனித சமூகம் மலரும். "மே''நாள் வரலாறு நம்மை எழுப்பட்டும். மனிதம் மலரட்டும்.
செம்பரிதி.