Breaking News
அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுகள் உண்டு.
ஸ்டாலினுக்கு ஆசை மட்டும் தான் இருக்கிறது.
ஜெ எனும் இரும்பு மனுஷி
அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுகள் உண்டு. அதிமுக ஆட்சியை பொறுத்தவரை ஒரே பவர் செண்டர் தான். ஜெவை மீறி யாரும் அதிகாரம் செய்ய முடியாது. அவரைத் தவிர யாருக்கும் அதிகாரம் கிடையாது. எம் பி, எம் எல் ஏ, மாவட்ட செயலாளர் என யாரும் வாலாட்ட முடியாது. அப்படி மீறி வாலாட்டினால் உடனடியாக மேலிடத்துக்கு ரிப்போர்ட் பறக்கும். வால் ஒட்ட நறுக்கப்படும். காவல்துறைக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அப்படியே மா செ, எம் எல் ஏ என யாராவது காவல் நிலையத்தில் அத்துமீறினால், சம்பந்தபட்டவரே மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்ய முடியும். அதிகபட்சம் உள்ளுர் ஆட்களும், காவல்துறையும் பரஸ்பர நட்பின் அடிப்படையில் பிரச்சினை வராமல் செயல்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் கலைஞர் ஆட்சியில் எல்லாமே மாவட்ட செயலாளர்கள் தான். மாவட்டத்தின் அனைத்து அரசு பிரதிநிதிகளும் அவருக்கு கட்டுப்பட்டவர்கள். அவரை மீறி யாரும் செயல்படவே முடியாது. கலைஞரால் கூட சில சமயம் இவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை நிலை. மாசெக்களின் கட்டளையை மீறினால் உடனடியாக அங்கிருந்து தூக்கி அடிக்கப்படுவார். இது தான் அதிமுக, திமுக ஆட்சிகளுக்கு இடையேயான வேறுபாடு.
திமுக ஆட்சியில் ஏகபட்ட பவர் செண்டர்கள் இருக்கும். அவர்கள் வைத்தது தான் சட்டம். இன்று ஸ்டாலின் முடிந்தவரை மாசெக்களின் அதிகாரத்தை குறைத்திருக்கிறார் என்றாலும், பல சீனியர்களின் கட்டுப்பாட்டில் தான் பல மாவட்டங்கள் இருக்கின்றன. அவர்களை மீறி ஸ்டாலினால் கூட செயல்பட முடியாது எனபது தான் நிதர்சனமான உண்மை.
ஜெவை பொறுத்தவரை சட்டம் ஒழுங்குக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒரு சின்ன பிரச்சினை என்றாலும் தூக்கி அடிக்கப்படுவோம் என்ற பயம் இருந்ததால் யாரும் தவறுக்கு துணை போக மாட்டார்கள். முக்கியமாக பெண்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகளை ஜெ மன்னிக்கவே மாட்டார்.ஸ்டாலின் ஆட்சியில் மணல் கொள்ளையை தடுக்கும் அரசு அதிகாரிகளையே கொலைவெறியோடு தாக்குகிறார்கள். சாராய விற்பனை படு ஜோர். டாஸ்மாக் மது விற்பனை 24 மணி நேரமும் சக்கை போடு போடுகிறது. கஞ்சா, போதை மருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றை பற்றி எத்தனை முறை புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையுமே இல்லை என்பது தான் உண்மை. காரணம் லோக்கல் பவர் செண்டர்களை மீறி ஸ்டாலினால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அல்லது அவருக்கு இந்த பிரச்சினைகளே போய் சேருவதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
காவல்துறைக்கு ஃப்ரீ ஹேண்ட் கொடுத்தால் ஒரே வாரத்தில் போதை என்பதே இங்கு இருக்காது. அந்தளவு திறமையாக செயல்பட காவல்துறையால் முடியும். ஆனால் அவர்கள் கைகள் கட்டப்படிருக்கின்றன. காவல்துறைக்கு முழுமையாக அதிகாரம் கொடுக்காமல் சாராயம், கஞ்சா, போதை என எதையுமே தடுக்க முடியாது. ஜெயலலிதாவைப் பார்த்து கலைஞர் அவர்களே பொறாமைபட்ட ஒரு விஷயம், ஜெ கட்சி நடத்திய விதம் தான். "அந்தம்மா மாதிரி என்னால முடிவு எடுக்க முடியலையேய்யா" என்று கலைஞர் சொன்னதாக சொல்வார்கள். கலைஞரின் மகனாக இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.என்பதே ஸ்டாலினின் ஆசை. ஆனால் ஸ்டாலினுக்கு ஆசை மட்டும் தான் இருக்கிறது.