தமிழ் ஈழம் வேண்டும்; மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை.
.
மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மதுரையில் செய்தியாளர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்த போதே இவ்வாறு கூறியதுடன், அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என்ற மன வருத்தம் உள்ளது. இந்தக் காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை, வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சதீவை மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும். ஆகவே கச்சதீவை மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார்.அந்த வகையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும்.
மக்களின் முடிவு சரியானதாக உள்ளது. இருந்தபோதிலும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்திருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் கச்சதீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள் என்றார்.