சூடு பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்: 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை நிராகரிக்கும் ரணில்
.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தங்களுக்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் கடும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, கடந்த வாரங்களில் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன் தமிழ் வடக்கு கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை தவிர்த்துள்ளார்.
“அரசியலமைப்பின்படி” மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் ஆனால் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது “புதிய நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும்” என்றும் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், “சுற்றுலா ஊக்குவிப்பு” “தொழில் பயிற்சி” உட்பட மாகாண சபைகளுக்கு இருக்கும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் பட்டியலிடுகிறது.
மேலும், யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், “வடக்கில் தண்ணீர் பற்றாக்குறை பல ஆண்டுகளாக நீடிக்கும் பாரிய பிரச்சினை” என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் தனது அரசாங்கம் ஏற்கனவே கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“யாழ்ப்பாணத்திற்கான ஆறு” திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், 2027ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மன்னாரில் கடலில் கலக்கும் பாலியாறு ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கத்தை அமைக்கவும் அவர் முன்மொழிந்தார்.
அத்துடன், ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விழா நடத்துவதாகவும் அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார்.