கேரள செவிலியருக்கு மரண தண்டனை அளிக்க ஏமன் அதிபர் ஒப்புதல்....மீட்க உதவி செய்யப்படும் என மத்திய அரசு உறுதி!
.

கேரள செவிலியருக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமியால் அங்கீகரித்துள்ளதால், ஒரு மாதத்துக்குள் தண்டனை நிறைவேற்றபடும் என்று தெரிகிறது.ஏமன் நாட்டவர் ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த விவரங்களை அறிந்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
ஏமன் நாட்டவர் ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியா கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அங்கு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை அதிபர் ரஷாத் அல்-அலிமியா அங்கீகரித்துள்ளார். இதன் மூலம் ஒரு மாதத்துக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை இந்தியா அறிந்திருக்கிறது. அவரை விடுவிக்க வேண்டும் என்ற பிரியாவின் குடும்பத்தின் விருப்பங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இந்த விஷயத்தில் சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும்,"என்றார்.
கேரளாவை சேர்ந்த பிரியா, கடந்த 2017ஆம் ஆண்டு ஏமனை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. செவிலியரான பிரியா கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஏமனில் தனியார் மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய கணவர், மகள் ஆகியோர் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா திரும்பினர். அப்போது ஏமனில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்ததால் பிரியாவால் இந்தியா திரும்ப முடியவில்லை.கடந்த 2015ஆம் ஆண்டு ஏமனை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து ஏமன் தலைநகர் சானாவில் மருத்துவமனை ஒன்றை பிரியா தொடங்கினார். ஏமனின் சட்டப்படி அந்த நாட்டை சேர்ந்தவர் மட்டுமே தொழில் நிறுவனங்களைத் தொடங்க முடியும் என்பதால் அவருடன் சேர்ந்து பிரியா மருத்துவமனையைத் தொடங்கினார்.