ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
,
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வழிவகுக்கும் வகையில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் பதிவில் ட்ரம்ப்,
ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த முன்மொழிவுடன் வரும் வரையிலும், பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரையிலும், ஈரான் மீதான நமது தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கான பாகிஸ்தான் மத்தியஸ்தர்களின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
அதேநேரம், ஈரானின் கடல்வழி வர்த்தகத்திற்கான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையைத் தொடரப்போவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இரண்டு மாத காலப் போரில் அமெரிக்காவின் பங்காளியான இஸ்ரேல் இதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
புதன்கிழமை அதிகாலையில் ட்ரம்பின் அறிவிப்புக்கு மூத்த ஈரானிய அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை, இருப்பினும் தெஹ்ரானில் இருந்து வந்த சில ஆரம்பகட்ட எதிர்வினைகள், ட்ரம்பின் கருத்துக்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தன.
இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் தலைவர்கள் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


