Breaking News
கனடா கந்தசுவாமி ஆலயத்தில், மௌனம் என்னும் ஆபத்து ..... பூனைக்கு யார் மணி காட்டுவார்கள்?
.
கனடா கந்தசுவாமி ஆலயத்தில், கனடாவுக்கான புதிய இலங்கை தூதருக்கு வழங்கப்பட்ட "மரியாதை" குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக்கியுள்ளன. கந்தசுவாமி ஆலயத்திற்கான இந்த விஜயம் ஒன்றும் தற்செயலானது இல்லை. இது அழைப்பு விடுக்கப்பட்ட விஜயமாக இல்லாவிட்டாலும் - ஆலய நிர்வாகத்திற்கு முன்னரே இந்த விஜயம் குறித்து தெரிந்திருந்ததாம்.
ஏற்கனவே கனடாவில் இலங்கை அரசாங்கத்தின் சில நகர்வுகளும், கனடாவில் உள்ள தமிழர் அமைப்புகள் இந்த விடயத்தில் காட்டிவந்த அசமந்தப் போக்கும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏன் கந்தசுவாமி ஆலயம் (அல்லது ஆலய நிர்வாகம் - அல்லது ஆலய நிர்வாகத்தில் ஒரு சிலர்) இந்த முடிவை எடுத்தது என்பதற்கான பதில் இல்லை. இதில் ஆலயத்தின் தரப்பில் கடைபிடிக்கப்படும் மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது. தனது தரப்பு நியாயத்தை ஆலயமும், அதன் நிர்வாகமும் ஏன் இதுவரை பொது வெளியில் பகிரவில்லை? அதற்கான அழுத்தத்தை ஏன் எந்த ஒரு அமைப்பும் வெளியிடவில்லை.
ஆலயங்கள், அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் அது சார்ந்திருக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பு என்ற வகையில் இந்த விடயம் அணுகப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதே கருத்தியல் நிலையில் இருந்து தான் அண்மையில் CTC - இலங்கை அரசுடனான விடயத்தையும் நான் அணுகியிருந்தேன்.
கனடாவில் ஸ்ரீலங்கா அரசின் தலையீடு ஒன்றும் புதிய விடயமல்ல - அண்மையில் கனடிய பிரதமர் இந்த விடயத்தில் தெரிவித்த கருத்து இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
பல புலம்பெயர் சமூகங்களைப் போலவே தமிழ் கனடியர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வதாக கூறிய Justin Trudeau, அவர்களைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் எமது சமூகத்தில் இந்த விடயத்தில் இன்னமும் கள்ள மௌனம் நிலவுகிறது. மௌனம் கலைய வேண்டிய அல்லது கலைக்கப்பட வேண்டிய நேரம் இது!
பூனைக்கு யார் மணி காட்டுவார்கள்?
Caneesha Singam