Breaking News
இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிறார் திருமூலர்:
திருமந்திரம் ;
திருமந்திரம் ;
____________
இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிறார் திருமூலர்:
* “ இம்மனிதர்கள் ஒப்பற்ற பரம்பொருளாகிய சிவபெருமானை எண்ணமாட்டார்கள்,உயிரைப்பற்றிய உண்மைகளை ஆராய்ந்தறியமாட்டார்கள், நல்வினை தீவினைகளையும் அவற்றால் விளையும் இன்ப துன்பங்களையும் எண்ணமாட்டார்கள். சுத்த மாயை,அசுத்தமாயைகளையும் குறித்துணர மாட்டார்கள்.ஒப்பற்ற சிவபெருமானே இவற்றை தமக்கு உள்நின்று உணர்த்தியும்,அவ்வினைகளெல்லாம் கழியுமாறு இருவினைப்பயன்களை ஊட்டி அருளுகிறான் என்பதையும்,இவ்வாறெல்லாம் உணர்த்தியும் ஊட்டியும் அருவப்பொருளாய் நிற்கிறான்,அனைத்திற்கும் ஆதாரமாகவுள்ளான் என்பதையும் உணரமாட்டார்கள்.” என்று வருந்துகிறார் திருமூலர்.
“ஒருவனை யுன்னார் உயிர்தனை யுன்னார்/இருவினை யுன்னார் இரு மாயையுன்னார்/ஒருவனுமே யுள்ளுணர்த்தி தின்றூட்டி/அருவனுமாகிய வாதரத்தானே “_ _ திருமந்திரம்,2389.
ஆனால் எல்லாப் பழியையும் மனிதர்கள் மேல் சுமத்தி,அவர்களைக் குறை கூறிக்கொண்டிருந்தால் இதற்குத் தீர்வுதான் என்ன? என்று கேட்பவர்களுக்கு திருமூலர் ஒரு உபதேசத்தையும் அருளுகிறார் :
“மயப்புறு விவ்வழி மன்னிநின்றாலுஞ்/சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி/மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்/அறப்பெற வேண்டும் அமரர்பிரானே “ __திருமந்திரம்,1830.
என்ற “ தேவ தேவனே ! கன்ம பூமியாகிய இங்கு மலமாயைகளினால் தலைவனது தாளில் தலைப்படுதலை மறந்து வாழ்ந்தாலும்,பூவையும் நீரையும் சிறப்பாகத் திருத்தமாக ஏந்தி மறவாமல் உன்னை வழிபடுகின்ற தன்மையை மிகுதியாக (அவர்கள்) அடைதல் வேண்டும்.அதனை ( அவர்களுக்கு) அருளுக “ **
“ உயிர்கள் பிறவிச் சூழலில் அகப்படும் போது,அதற்குரிய வினைவயப்பட்டு மயங்கி,செய்வனவற்றைச் செய்யாமலும்,தவிர்க்க வேண்டியனவற்றைத் தவிர்க்காமலும் மறந்து உழலுமாதலின், தனக்கு ஒரு தலைவன் உளன்; அவன் சிவனே;அவனே எப்போதும் நினைக்கத்தக்கவன்; பூசிக்கத்தக்கவன் என்பதை மறந்து விடுகின்றன..எனவே அங்ஙனம் மறவாது பூவும் நீரும் ஏந்திப் பூசிக்கவும்,வந்திக்க,வாழ்த்த வரந்தரல் வேண்டும்.” _என்று அன்றாட பூசையில் இறைவனைப் பிரார்த்திப்பீராக “ *
__ என்று நமக்கெல்லாம் உபதேசித்திருக்கிறார்.
ஆனால், “ எனக்கு நேரமில்லை,அது சரியில்லை,இது சரியில்லை,வீட்டில் ஒத்துழைப்பில்லை,வேலை செய்யும் இடத்திலும் பிரச்சனை,” என்று சொல்ல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் காரணங்கள் நமக்குள்ளன. என்ன செய்ய ? ஒவ்வொருவரும் ஓவ்வொரு தனித்தனி ஆன்மா,அவரவர் ஆன்மா கடைத்தேற அவரவர் தானே வழிதேட வேண்டும்.?
இதை நினைவில் கொள்ளுதல் நலம் :
“அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்/அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்/எவரெவர்க் குதவினர்/எவரெவர்க் குதவிலர்/தவரவர் நினைவது தமை உணர்வதுவே “ ___சிவபோகசாரம் (தனிப்பாடல்கள்)
(** நன்றி: திருவாவடு துறை ஆதீனம்,திருமந்திரம் உரை நூலிலிருந்து)