சாவகச்சேரி வைத்தியசாலையில் நடப்பது என்ன?; வைத்தியரை கைது செய்ய முயற்சி, நள்ளிரவையும் தாண்டி போராட்டம்
.
இந்நிலையில், பொதுமக்கள் வைத்தியசாலை நேற்றிரவு முற்றுகையிட்ட பொது மக்கள் நள்ளிரவையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்த வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.
இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை பொலிஸ் நிலையத்திற்கு நேரில் வந்து வாக்கு மூலம் வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அழைப்பாணை வழங்கி இருந்தனர்.
“தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னால் பொலிஸ் நிலையம் வந்து வாக்குமூலம் அளிக்க முடியாது. அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலை முன்பாக கூடிய மக்கள் இரவிவிரவாக தமது போராட்டத்தை தொடர்ந்தார்.
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகளை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி இருந்தது.
இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் வைத்தியர்கள், வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வந்தன. அத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவர் வைத்தியசாலையில் தங்கி தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதனால் மக்கள் மத்தியில் வருக்கு பாரிய ஆதரவு கிடைத்துள்ளதுடன், அவருக்கு ஆதரவாக பிரதேச மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது நிலைமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேஸ்புக் வாயிலாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தகவல்கள் வெளியிட்டு வருகின்றார்.
மேலும், எனது தமிழ் மக்கள் சொல்லாமல் வைத்தியசாலையை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன். நான் மூன்று நாட்களாக எவ்வித பாது காப்பும் இல்லாமல் வைத்தியசாலையில் இருக்கிறேன்” என வைத்தியர் அர்ச்சுனா அறிவித்துள்ளார்.