'கண்ணிவெடி கண்டறியும் ஸ்மார்ட் ஷூ' - நெல்லையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் அசத்தல் சாதனை!
ராணுவ பாதுகாப்பு பணியின்போது கண்ணிவெடிகளை முன்கூட்டியே கண்டறியும் பிரத்யேக கால் அணி.

ராணுவ வீரர்களுக்கு பயன்படும் வகையில், நெல்லையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் 'கண்ணிவெடி கண்டறியும் ஸ்மார்ட் ஷூ' ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மாணவனின் இந்த கண்டுபிடிப்பிற்காக தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.
நாட்டு மக்களை பாதுகாப்பதில் ராணுவ வீரர்களின் பணி முழுக்க முழுக்க தன்னலமற்றது. கடும் வெயில், மழை, பனிப்பொழிவு போன்ற சிரமமான சூழலிலும் ராணுவ வீரர்கள் தங்களது உடலை வருத்திக் கொண்டு நாட்டுக்காக எல்லையில் கண்விழித்துக் கொண்டிருக்கிறார்கள். போர் நேரங்களில் எதிரிகளை வீழ்த்துவதிலும் சரி, அவர்களுடன் சண்டை போடுவதிலும் சரி. நம் வீரர்கள் மிகவும் சிறப்பானவர்கள். நாட்டுக்காக சாவை நேருக்கு நேர் எதிர்கொண்டு உயிரை துறந்த தமிழக ராணுவ அதிகாரி முகுந்த் எண்ணற்ற வீரர்கள் நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
கல்வி திறனை மேம்படுத்த புத்தாக்க பயிற்சி:
இத்தகைய ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்ப உதவியோடு அரசு பல நவீன கருவிகளை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் என்சிசி மாணவர் ஒருவர் தனது புதிய கண்டுபிடிப்பு மூலம் ராணுவ அதிகாரிகளை வியப்படைய செய்துள்ளார்.
அதாவது, நாடு முழுவதும் என்சிசி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கு இடையேயான புதிய கண்டுபிடிப்பு போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது.
தேசிய அளவில் முதல் பரிசு:
இப்போட்டியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் நாகராஜன் - சிதம்பரம் தம்பதியின் மகன் டேவிட் சாலமோன் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்டு தனது கண்டுபிடிப்பிற்காக தேசிய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். மாணவன் டேவிட் சாலமோன், பூமியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை காலில் அணியும் ஷூ மூலம் முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை வடிவமைத்துள்ளார்.
கண்ணிவெடி எச்சரிக்கை கருவி:
அதாவது ராணுவ வீரர்கள் அணியும் ஷூவுக்கு அடியில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மூலம் மின்னோட்டத்தை ஏற்படுத்தும் 'பெல்டியர் மாடல்' என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சென்சார் ஒன்றை டேவிட் சாலமோன் வடிவமைத்துள்ளார். இந்த பிரத்யேக கருவி பொருத்திய ஷூவை அணிந்து நடக்கும்போது பாதையில் கண்ணிவெடிகள் உள்ளிட்ட மர்ம பொருட்கள் புதைக்கப்பட்டிருந்தால் சுமார் 35 அடி தூரத்திலேயே இந்த கருவி ஒலி மூலம் எச்சரிக்கை விடுத்து அதன் தாக்குதலில் இருந்து ராணுவ வீரர்களை பாதுகாக்கும்.
படிக்கும் பள்ளிக்கு பெருமை:
தற்போது ராணுவ வீரர்கள் தனி கருவிகளைக் கொண்டு கைகளால் இயக்கிதான் கண்ணிவெடிகளை கண்டறிந்து வருகின்றனர். இதுபோன்று உடலோடு இணைந்த ஷூ மூலம் கண்ணிவெடிகளை கண்டறியும் கருவியை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மாணவன் டேவிட் சாலமோனுக்கு இந்த கண்டுபிடிப்புக்காக தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது. இதன் மூலம் டேவிட் சாலமோன் தேசிய அளவில் தனது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். தூய சவேரியார் பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் டேவிட் சாலமோனை வெகுவாக வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.
தந்தை அளித்த ஊக்கம்:
இதுகுறித்து டேவிட் சாலமோன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ராணுவ பாதுகாப்பு பணியின்போது கண்ணிவெடிகளை முன்கூட்டியே கண்டறியும் பிரத்யேக கருவியை வடிவமைத்துள்ளேன். காலில் அணியும் ஷூவில் இந்த கருவியை பொருத்தி பயன்படுத்தலாம். எனது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. எனவே அவரைப் போன்று வேறு யாரும் மாற்றுத்திறனாக இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தந்தையை ஊக்கமாக எடுத்து, இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டேன்.
இதுதவிர எனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின்போது, கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட போதிலும் ராணுவ வீரர் ஆனந்தன் குணசேகரன் என்பவர் பாரா ஒலிம்பிக்கில் நாட்டுக்காக விளையாடினார் என்று அவரை பற்றி தெரிந்து கொண்டேன். அதுவும் எனது கண்டுபிடிப்புக்கு ஊக்கமாக இருந்தது. நான் கண்டுபிடித்த கருவி வெப்பம் மற்றும் குளிர் காலங்களில் செயல்படும் வகையில் வடிவமைத்துள்ளேன்.
'பெல்டியர்' என்ற மின் சாதனம் மூலம் இந்த கருவிக்கு மின்னோட்டம் கிடைக்கும். இந்த பெல்டியர் வெப்பம் மற்றும் குளிர் நேரங்களில் மின்னோட்டத்தை ஒன்றுபடுத்தும் திறன் கொண்டது. இது வெளிநாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது வருகிறது. நமது நாட்டில் இந்த பெல்டியர் மின்சாதனத்தை பெரிய அளவில் யாரும் பயன்படுத்தவில்லை. முதல்முறையாக நான் பயன்படுத்தி இந்த கருவியை தயாரித்துள்ளேன்'' என்று டேவிட் சாலமோன் கூறினார்.
இதுகுறித்து என்சிசி கமாண்டர் பாண்டியன் கூறும்போது, "இந்திய அளவில் 55 மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதில் தேசிய அளவில் டேவிட் சாலமோன் முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் பிரதமர், ராணுவ உயர் அதிகாரிகள், அமைச்சர் உள்பட அனைவரும் மாணவனை பாராட்டினர். மாணவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ராணுவ துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்று என்சிசி கமாண்டர் பாண்டியன் தெரிவித்தார்.
மேலும் மாணவரின் இந்த கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் (DRDA) அங்கீகரிப்பதற்கான நடவடிக்கையை பாதுகாப்பு துறை மேற்கொள்ள இருப்பதாக என்சிசி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.