மற்றவரின் குழந்தைக்கு சுமந்திரன், சாணக்கியன் தங்கள் முதலெழுத்தைக் கொடுக்கப் பார்க்கின்றனர்
.
சஜித் பிரேமதாசாவுக்கு வடக்கிலுள்ள முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் கூட வாக்களித்துள்ள நிலையில் தாங்கள் சொல்லித்தான் சஜித்துக்கு வடக்கில் வாக்குகள் அளிக்கப்பட்டதாக சுமந்திரன்,சாணக்கியன் ஆகியோர் கூறுவது மற்றவரின் குழந்தைக்கு இவர்கள் தங்கள் முதலெழுத்தைக் கொடுக்கப் பார்ப்பது போன்றது என யாழ் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சஜித்துக்கு வாக்குகள் வழங்கப்பட்டது தமது கோரிக்கைகளின் நிமித்தமே என்று சுமந்திரன்,சாணக்கியன் ஆகியோர் மார் தட்டுகிறார்களே! அது பற்றி உங்கள் கருத்தென்ன? என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஏன் மற்றவரின்குழந்தைக்கு இவர்கள் தங்கள் முதலெழுத்தைக் கொடுக்கப் பார்க்கின்றார்களா? சஜீத் ஏற்கனவே தமிழ் மக்களிடையே முன்னைய தேர்தலின் போது கணிசமான வாக்குகளைப் பெற்றவர். பல வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றார். அதனால் பலருடன் அவர் தொடர்பு வைத்திருக்கின்றார்.
அதைவிட யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல தேர்தல் தொகுதிகளில் முதனிலை பெற்றவர் அரியநேத்திரன்.அவர் சில தொகுதிகளில் இரண்டாவது நிலை பெற்ற போதும் மிகக் குறைவான வாக்குகளால்தான் அவ்வாறு இரண்டாவதாக வந்தார். எனவே பெருவாரியான மக்கள் அவருக்கு மனமுவந்து வாக்களித்துள்ளார்கள். அத்துடன் முஸ்லிம்கள் பலர் சஜீத்துக்கு வாக்களித்திருந்தார்கள். அவர்கள் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரின் வேண்டுகோளை மதித்து அவ்வாறு வாக்களிக்கவில்லை.
முல்லைத்தீவு,வவுனியா போன்ற இடங்களில் ரிஷாட் பதுர்தீனின் செல்வாக்கு இருந்து வருவது எல்லோரும் அறிந்ததே. மஸ்தானின் செல்வாக்கும் இருந்து வருகின்றது. எனவே சஜித்துக்கு முஸ்லிம்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கலாம்.அதைவிட முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று அவர்கள் (சிங்களவர்கள்) தற்போது அங்கே வாக்களிக்க உரிமை பெற்றுள்ளார்கள்.
முல்லைத்தீவில் மக்கள் மற்றும் படையினரின் விகித வீதம் 2:1 ஆகும். படையினரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். ஆகவே சஜித்துக்கு கிடைத்த வாக்குகள் ஏற்கனவே அவருக்கு இருந்த வாக்குகளும் மேலும் சிங்கள, முஸ்லிம் வாக்குகளுமாவன. 1000க்கு மேலான பௌத்த விகாரைகளை முல்லைத்தீவிலும் கிழக்கு மாகாணத்திலும் கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் சஜித் . அவ்வாறான ஒருவருக்கு சுமந்திரன் கூறியதால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா?
தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் தனது அணியினரின் கூட்டத்தை நடத்திய போது அரியநேத்திரன் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கக் கூடாது என்று தடை விதித்தனர். அப்படியிருந்தும்அரியநேத்திரன் தேர்தலில் ஈடுபட்டு குடா நாட்டினுள் பல இடங்களில் முதன்மை நிலை பெற்றுள்ளார் என்றால் அவரை அந்த இடத்தில் நிறுத்தியவர்கள் தமிழர்களா வேறு இன மக்களா?
கிழக்கு மாகாண தமிழ் மகனுக்கு பெருவாரியாக வாக்களித்த வடமாகாணத் தமிழ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அத்துடன் சுமந்திரன் சிபார்சு செய்த சஜித்தின் வாக்குகளுக்கு அதிகமாகவே ரணிலின் வாக்குகளின் தொகையும் அரியநேத்திரனின் வாக்குகளின் தொகையும் கூட்டி வர அமைகின்றன. ஆகவே சஜித்துக்கு எதிரான வாக்குகளே வடமாகாணத்தில் கூடியதாக போடப்பட்டன.
உண்மையில் இவர்களின் வேண்டுகோளினால் மட்டும் தான் சஜீத் வெற்றி பெற்றார் என்றால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் இவ்விருவரையும் முற்றாகப் புறக்கணிக்கும் போது உண்மை வெளிவரும்.
வன்னியிலும் கிழக்கிலும் எமது கட்டமைப்பு மக்கள் சந்திப்பு செய்ய காலதாமதம் ஆகிவிட்டது. எனினும் சுமார் 40 நாட்களில் இவ்வளவு முன்னேறியமை பொது வேட்பாளருக்குத் தமிழ் மக்களிடையே இருக்கும் செல்வாக்கையே எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் நாடு பூராகவும் பல தேர்தல் தொகுதிகளில் அரியநேத்திரனுக்கு சொற்பமாயினும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
காகம் ஒரு மரக்கொப்பில் உட்கார்ந்திருக்க மாம்பழம் ஒன்று விழுந்ததாம். தான் உட்கார்ந்ததில் தான் மாம்பழம் விழுந்தது என்று கொண்டாடியதாம் காகம். இவர்களின் மார்தட்டல் அந்தக் காகத்தின் மார்தட்டல் தான்.
சுமந்திரனும் சாணக்கியனும் வடகிழக்கு தமிழ் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதித்து இந்தக் கேள்வியை நீங்கள் வைத்துள்ளமை மனவருத்தத்தைத் தருகின்றது என்றார்.