பண்ணைப்புரம் டூ லண்டன்! இங்கிலாந்தை நனைய வைத்த இளையராஜாவின் சிம்பொனி இசை, சின்னத் தாயவள் தந்த ராசாவே..
இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்திருக்கிறார்.

இசைஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்திருக்கிறார். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இந்திய நேரப்படி 12.30 மணிக்கு இந்த சிம்பொனி தொடங்கியது. வேலியன்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.
தமிழகத்தின் தெற்கு மூலையில் இருக்கும் ஒரு மலை சார்ந்த மாவட்டம் தேனி. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்தபோது பண்ணைபுரத்தில் சின்னத்தாயின் மகனாகப் பிறந்தவர் இளையராஜா. பாவலர் வரதராஜன் எனும் தனது சகோதரரால் இசை உலகிற்கு அழைத்து வரப்பட்டவர்.
தொடர்ந்து கம்யூனிஸ மேடைகளில் கச்சேரி செய்து வந்த அவர், இசையமைப்பாளர் ஆகும் ஆசையில் சென்னை வந்தார். அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் அதற்கு பிறகு தொட்டதெல்லாம் வெற்றி தான். இதுவரை ஆயிரம் திரைப் படங்களுக்கு மேல் 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அவர் இசையை கேட்காத மொழியே இல்லை. நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியதோடு பாடியும் இருக்கிறார். தொடர்ந்து இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில் தான் நீண்ட நாட்களாக சிம்பொனி எழுதி வருவதாகவும், விரைவில் அதை அரங்கேற்றுவேன் என அறிவித்தார் இளையராஜா. சொன்னது போலவே லண்டனில் அதன் அரங்கேற்றம் இன்று நடைபெற்றது. வேலியன்ட் என பெயரிடப்பட்டுள்ள சிம்பொனியின் அரங்கேற்றம் லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் நடைபெற்றது. உலகின் இசை வரலாற்றில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக பீத்தோவான் உள்ளிட்டோர் தான் பேசப்படுவார்கள்.
ஆனால் தமிழகத்தின் ஒரு மூலையில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த இளையராஜா உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை கவரும் வகையில் சிம்பொனி இசையமைக்க உள்ளது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களுக்கு பெருமை தான். இந்த இசை நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசை குழுக்களில் ஒன்றான ராயல்பிலார்மாலிக் ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்கள் தான் இசையமைத்தனர். ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் மொத்தம் 365 இருக்கைகள் இருக்கிறது. குறைந்தபட்சமாக 9 ஆயிரம் முதல் 31,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அங்கு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர். சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இளையராஜாவின் சிம்பொனி இசை தொடங்கியது. இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளையராஜா கடந்த ஆறாம் தேதி சென்னையில் இருந்து லண்டன் சென்றார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் எல் முருகன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.