புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாடு
.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகிறார். தேசியத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் ஒற்றையாட்சி, மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அவதானத்துடன் செயற்படவேண்டும். நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு நாங்கள் ஆயுதமேந்தி போராடியவர்கள் . நாட்டுக்காக உயிர் நீர்த்த இராணுவ படைகளின் தியாகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகிறார்.2015 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த புதிய அரசியலமைப்பு உருவாக்க வரைபு சமஷ்டியாட்சி உருவாக்கத்தை பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி அரசியலமைப்பின் அம்சங்களுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் ஒற்றையாட்சி யாப்பு இயல்பாகவே இரத்தாகும்.
எனவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது தவறு . தேசியத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.