வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: இலங்கையை நேரடியாக தாக்கும் – ரணிலுக்கான களம்
.
இஸ்ரேல் – ஹமாஸ், இஸ்ரேல் – ஈரான் மற்றும் இஸ்ரேல் – லெபனான் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மத்திய கிழக்கில் அதாவது முழு வளைகுடா நாடுகளிலும் பரவும் அபாயம் உருவாகி வருவதால் அதன் தாக்கத்தை தீவிரமாக இலங்கை எதிர்கொள்ளும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் உயர் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த 31ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹரானில் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகளாவிய மற்றும் வளைகுடா அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காசாவிலோ அல்லது பலஸ்தீனத்திலோ இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிந்தால் அது மிகப் பெரிய உலகத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது.
ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் எப்போதும் இஸ்ரேல் முட்டிமோதும் நாடாக உள்ள ஈரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமை அதுவும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த தருணத்தில் என்பதால் அது முழு மத்திய கிழக்கையும் உலுக்கியுள்ளது.
இஸ்ரேலுக்கு பலமான பதிலடியை கொடுக்கும் உத்தரவை ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி பிறப்பித்துள்ளதால் 99 வீதம் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர் மூளுமானால் அது ஒட்டுமொத்த உலக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே, ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பமான காலகட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கோதுமை மற்றும் தானிய வகைகளின் விலை உயர்வு என பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.
அதேபோல் இஸ்ரேல் – காசா போர் ஆரம்பமான காலகட்டம் முதல் எரிபொருள் விலை தொடர்பில் ஒரு தளம்பலான நிலைமை காணப்படுகிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 65 சதவீதமான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவது வளைகுடா நாடுகளில்தான்.
ஈரான் – இஸ்ரேல் இடையில் யுத்தம் மூண்டால் உலக எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு அது இலங்கையின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படும்.
எரிபொருள் விநியோகத்துக்கு தடை ஏற்பட்டால் கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வரிசை யுகம் போன்றதொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.
அத்துடன், இலங்கையில் இருந்தான மத்திய கிழக்குக்கான ஏற்றுமதிக்கும், உலக ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுடன், உள்நாட்டிலும் போக்குவரத்து முடக்கங்களும் விநியோக நடவடிக்கைககளும் பாதிக்கப்படும். இதனால் மீண்டும் பொருட்களின் விலையேற்றம் உட்பட பல்வேறு நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம்.
அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலை பிற்போட பல்வேறு யுத்திகளை கையாண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளும் அரசியல் களநிலையும் தானாக இதன் ஊடாக அமையலாம்.
இலங்கை போன்ற நாடுகளில் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ளும் வசதிகள் மிகக் குறைவாகும். குறிப்பாக ஓர் அல்லது இரண்டு மாதங்கள் வரையே இலங்கையால் எரிபொருள் கையிருப்பை பேண முடியும். அத்தகையதொரு பொருளாதார கட்டமைப்பும் களஞ்சிய வசதியும்தான் இலங்கைக்கு உள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையில் போர் மூண்டால் அது இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.