ரணில் – மகிந்த ஓய்வு பெறவே மாட்டார்கள்
.
ரணில் விக்கிரமசிங்கவும் மகிந்த ராஜபக்ஷவும் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும், அவர்களின் மனங்களில் மீண்டும் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கின்றது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் கூறுகையில்,
மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால் ஓய்வு பெற்றது போன்று தெரிந்தாலும் அவர் அவ்வாறு அரசியலில் இருந்து போகப் போவதில்லை. அவர் மாத்திரமன்றி அவரின் குடும்பத்தில் நாமல் தவிர்ந்த மற்றையவர்களும் ஓய்வு பெற வேண்டும்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் அதனை நம்ப முடியாது. 2005ஆம் ஆண்டில் இருந்து இவர் இப்படிதான் கூறிக்கொண்டிருக்கின்றார்.
இருவரின் மனங்களிலும் மீண்டும் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் உள்ளது. அநுரகுமார திஸாநாயக்க எங்கேயாவது தவறு செய்துவிடுவார் அப்போது மீண்டும் வாய்ப்பை பெறலாம் என்று நினைக்கின்றனர். இந்த சம்பிரதாயம் இல்லாமல் போக வேண்டும். மகிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்று நாமலுக்கு இடமளிக்க வேண்டும். அதேபோன்று ரணில் ஓய்வு பெற்று ருவான் விஜேவர்தனவுக்காகவது இடமளிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். வேண்டுமென்றால் அவர்களுக்கும் சந்தர்ப்பங்களை வழங்கலாம்