ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்ந்துகொண்டேயிருக்கும்!
.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக தேர்தல்களில் வாக்குறுதி அளித்து மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் எவருமே அதை ஒழிக்கவில்லை என்பது அண்மைக்கால வரலாறு.
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அந்த ஆட்சிமுறையை ஒருபோதுமே ஆதரிக்காத ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அந்த பதவிக்கு வந்தவர்களில் எவருமே அதை ஒழிப்பதில் அக்கறை காட்டவில்லை. சிலர் ஏற்கெனவே ஜனாதிபதி பதவிக்கு இருந்த அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தார்கள் என்பது எம்மெல்லோருக்கும் தெரியும்.
ஜனாதிபதி திசாநாயக்கவும் அவர்களைப் போன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்று முன்கூட்டியே கூறுவது பொருத்தமில்லை என்றாலும் கூட அவரால் அதைச் செய்யக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
திசாநாயக்க பதவியேற்று ஒரு சில தினங்களில் தேசிய மக்கள சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.
இத்தகைய பின்புலத்தில் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையின் வரலாற்றை இந்த கட்டுரை திரும்பிப் பார்க்கிறது.
ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக கடந்த பல வருடங்களாக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றபோதிலும், ஜனாதிபதிகளை தெரிவுசெய்வதற்கு மக்கள் தேர்தல்களில் பெருமளவு உற்சாகம் காண்பிப்பது ஒரு முரண் நகையாகும். ஜனாதிபதி ஆட்சிமுறை ஒரு புறத்தில் கடுமைான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்ற அதேவேளை, மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் மக்கள் பெருமளவு ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள்.
பெரிதும் பழிகூறப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் 1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சி முறையை இல்லாமல் செய்து ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்த அந்த அரசாங்கத்தில் அண்மையில் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் அங்கம் வகித்தார்.
நீண்ட வரலாறு
ஜே.ஆர். ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை நீண்ட வரலாற்றை கொண்டது. பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் (1965 – 1970) இராஜாங்க அமைச்சராக (தற்போதைய இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து வேறுபட்டது) பதவிவகித்த ஜெயவர்தன 1966 டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு நிகழ்த்திய உரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய தனது சிந்தனையை முன்வைத்து அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வகைமாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றுக்கு ஆதரவாக வாதிட்டார்.
“நிறைவேற்று அதிகார தலைவர் நேரடியாக மக்களினால் தெரிவுசெய்யப்படுவார். அவர் குறித்துரைக்கப்படும் வருடங்களை உள்ளடக்கிய தனது பதவிக்காலம் முழுவதும் சட்டவாக்க சபையில் (பாராளுமன்றம்) தங்கியிருக்கமாட்டார். அவர் குறிப்பிட்ட வருடங்கள் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகார பதவியில் இருப்பார். சட்டவாக்க சபையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகமாட்டார். பாராளுமன்ற கட்சியின் கண்டனத்துக்கு ஆளாகுவோமே என்ற பயத்தில் சரியான, ஆனால் பிரபலமான தீர்மானங்களை எடுக்காமல் விடமாட்டார்” என்று அவர் அந்த உரையில் கூறினார்.
“மக்களினால் நேரடியாக தெரிவுசெய்யப்படும் நிறைவேற்று அதிகார தலைவர் அதே மக்களினால் தெரிவுசெய்ப்படும் ஒரு பாராளுமன்றத்தின் விருப்பு வெறுப்புகளில் தங்கியிருக்கமாட்டார்” என்பதே ஜெயவர்தனவின் சிந்தனையின் சாராம்சம்.
அவரின் இந்த கருத்து அரசியல் அதிகார வர்க்கத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜெயவர்தனவுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்திருந்தன. ஜெயவர்தனவின் யோசனையை டட்லி உறுதியாக எதிர்த்தார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் கூட ஒரு சிலரே ஜெயவர்தனவின் யோசனையை ஆதரித்தனர். அத்தகைய சூழ்நிலையின் தனது யோசனையை அவரால் முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. ஆனால் அந்த சிந்தனையை ஒருபோதும் கைவிடவில்லை.
ஆறு வருடங்கள் கழித்து பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் (1970 – 1977) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி தொடர்பான தனது சிந்தனையை ஒரு புரிந்துகொள்ளத்தக்க முன்மொழிவின் வடிவில் முன்வைப்பதற்கு ஜெயவர்தனவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்காக பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அப்போது டட்லி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த அதேவேளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெயவர்தன வகித்தார். இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் தீவிரமடைந்த நிலையில் ஜெயவர்தன கட்சிக்குள் பெரும்பாலும் தனித்து தன்னெண்ணத்தில் செயற்படும் ஒருவராக விளங்கினார்.
அரசியல் நிர்ணய சபையில் ஜெயவர்தன 1971 ஜூலை 2ஆம் திகதி ஒரு பிரேரணையை முன்வைத்தார். “அரசின் நிறைவேற்று அதிகாரம் குடியரசின் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் அவர் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார். 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் வாக்குகளினால் மாத்திரம் நேரடியாக தெரிவு செய்யப்படும் குடியரசின் ஜனாதிபதி ஏழு வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்டிருப்பார். அமைச்சரவையின் தலைவராகவும் அவரே இருப்பார்” என்று அந்த பிரேரணையில் கூறப்பட்டது. கொழும்பு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் இருந்த ரணசிங்க பிரேமதாச பிரேரணையை வழிமொழிந்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு ஆதரவாக ஜெயவர்தன அரசியல் நிர்ணய சபையில் தனது பேச்சுத்திறனை வெளிக்காட்டி வாதிட்டார். பிரேரணை நிராகரிக்கப்பட்டது. அவரின் பிரேரணைக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமை தாங்கினார். டட்லி சேனநாயக்க உறுதியாக எதிர்த்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பானர்களும் ஜெயவர்தனவின் பிரேரணையை ஆதரிக்கவில்லை. அன்றைய அரசியல் நிர்ணய சபையினால் ஜெயவர்தன – பிரேமதாச பிரேரணை நிராகரிக்கப்பட்டது.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே 22ஆம் திகதி புதிய குடியரசு அரசியலமைப்பை பிரகடனம் செய்தது. சோல்பரி அரசியலமைப்பின் கீழான மகாதேசாதிபதியை (Governor General) ஜனாதிபதி பதிலீடு செய்தார். தேசிய அரச சபை என்று அறியப்பட்ட பாராளுமன்றத்திடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. வில்லியம் கோபல்லாவ சம்பிரதாயபூர்வமான அரச தலைவராக இருந்தபோதிலும், உண்மையான அதிகாரம் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடமே இருந்தது.
ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி
டட்லி சேனநாயக்க 1973 ஏப்ரலில் காலமானதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ஜெயவர்தன பொறுப்பேற்றார். தனது தலைமைத்துவத்தை மிகவும் விரைவாகவே நிலையுறுதிப்படுத்தக்கொண்ட அவர் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். இப்போது ஒரு வலுவான நிலையில் இருந்துகொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான தனது சிந்தனையை அவரால் முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.
“மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் ஒப்படைக்கப்படும். எமக்கு பழக்கப்பட்டுவிட்ட பாராளுமன்ற முறையும் பேணப்படும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்ட கட்சியில் இருந்து பிரதமரை ஜனாதிபதி தெரிவுசெய்வார். தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சர்களாக இருப்பர்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் ஆட்சிமுறையில் இருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கான மாற்றம் என்பதே அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பிரசாரப் பொருளாக அமைந்தது. மகத்தான வெற்றி பெற்ற அந்த கட்சி பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 141 ஆசனங்களைக் கைப்பற்றியது. 1977 ஜூலையில் ஜெயவர்தன பிரதமராக பதவியேற்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் தனது சிந்தனையை நடைமுறைப்படுதும் நோக்கில் அவர் விரைவாகச் செயற்படத் தொடங்கினார்.
ஜே.ஆர். ஜெயவர்தனவும் சில அமைச்சர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்களும் (ஜே. ஆரின் சகோதரரர் எச்.டபிள்யூ. ஜெயவர்தன கியூ.சி. உட்பட) முன்னணி சட்ட அறிஞர் மார்க் பெர்னாண்டாவின் உதவியுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் இலக்கை நோக்கி செயற்படத் தொடங்கினர். பூர்வாங்க கலந்தாலோசனை 1977 ஆகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெற்றது. முதலில் 1972 அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்று வரையப்பட்டது. அது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்ட பிறகு தேசிய நலனுக்கு அவசரமான ஒன்றாக அங்கீகரிக்கப்