ஈரானுடன் சமரசம்? அமெரிக்க தூதர் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தை!
ஈரான் தனது தேவைக்காக யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது.

அணு ஆயுத விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று அமெரிக்கா சார்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த விட்காஃப், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்திருக்கிறார்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு நெருக்கமாக இருப்பதாகவும், எனவே ஈரான் மீது போர் தொடுக்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஈரான் தனது தேவைக்காக யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது. யூரேனியம் என்பது அணு ஆயுதத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். அதே நேரம் இதை வைத்து மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். ஈரான் தனது சொந்த மின்சார தேவைக்காக யுரேனியத்தை செறிவூட்ட தொடங்கியது. இதற்கான அளவை அமெரிக்கா நிர்ணயித்தது. 2015ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 3.67% அளவுக்கு மட்டுமே யுரேனியம் செறிவூட்டப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இன்று இந்த ஒப்பந்தத்தை மீறி சுமார் 60% வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டியுள்ளது. 90% வரை யுரேனியம் செறிவூட்டப்பட்டால் அதை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியும். 90%க்கும் 60%க்கும் இடையே 30% இருக்கிறதே ஏன் பயப்பட வேண்டும்? என்று கேள்வி எழலாம். விஷயம் என்னவெனில் யுரேனியத்தை 20% அளவுக்கு செறிவூட்டிவிட்டால், அதை 90%க்கு கொண்டு செல்ல அதிக நேரமோ, மூலப்பொருட்களோ தேவையில்லை. எனவேதான் அமெரிக்கா அச்சம் கொண்டிருக்கிறது.
ஈரானின் நடத்தைக்கு காரணம் அமெரிக்காதான். அதாவது டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு அதிபராக இருந்தபோது, அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றிவிட்டார். எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ஈரான் தனது செறிவூட்டலை அதிகரித்தது. மட்டுமல்லாது மருத்துவ துறையில் யுரேனியத்தின் பயன் அதிகம். குறிப்பாக சில வகை ஐசோடோப்புகள் யுரேனியத்தை கொண்டுதான் உருவாக்கப்படுகிறது.
Technetium-99m - உடல் உறுப்பு வேலைப்பாடுகள், புற்றுநோய் கண்டறிதல் - நோயறிதல் (Imaging)
Iodine-131 - தைராய்டு சிகிச்சை மற்றும் புற்றுநோய் - சிகிச்சை
Fluorine-18 - PET Scan-களில் பயன்பாடு - நோயறிதல்
Lutetium-177 - ஆழ்ந்த புற்றுநோய்களுக்கு - சிகிச்சை
என்ன காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தது. இந்நிலையில் இன்று ரஷ்யாவுடன் அமெரிக்க தூதர் விட்காஃப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடனும் விட்காஃப் பேசியிருக்கிறார். எனவே ஈரான் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.