இலங்கையில் பிரதமர் மோடி: 'மீனவர்கள் பிரச்சனை பேசப்படுமா?' - தமிழர்கள் எதிர்பார்ப்பு!
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நேரடியாக இலங்கை

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார். மூன்று நாள் பயணத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசப்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இணைந்து 'பிம்ஸ்டெக்' என்ற கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளன. இந்த பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6 ஆவது உச்சி மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நேரடியாக இலங்கை, தலைநகர் கொழும்பு நகரத்துக்கு ஏப்ரல் 4 மாலை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று நாள் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6 ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் போது எரிசக்தி, வர்த்தகம், தகவல் தொடர்பு, நவீன மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய நாட்டின் நிதி உதவியுடன் திரிகோணமலை மாவட்டம், சம்பூரில் அமைக்கப்பட்டு இருக்கும் சோலார் மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4 ஆவது பயணம் இதுவாகும்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக இடையேயான இந்த சந்திப்பை தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளை சார்ந்த 10 முடிவுகள் வெளியிடப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத் தீவு விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இதை பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனை மற்றும் அபராதம் எதுவும் இல்லாமல் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சென்றடைந்ததை அறிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ''கொழும்புக்கு வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன்." என்று பதிவிட்டுள்ளார்.