மதுபான நிலையங்களை கட்டுப்படுத்த வேட்பாளர்களிடம் பேசப்பட்டதா?
.
தேர்தல் காலங்களில் நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதி வாழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு தரம் குறைந்து கள்ளு பானம் விநியோகிக்கப்படுவதாக ஒரு அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்தமை சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
ஆனால் இந்த விடயத்துக்கு கோபம் கொப்புளிக்க பதில் தந்தவர்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளாவர். நுவரெலியா மாவட்டத்தில் அதிக மதுபானசாலைகள் உருவாகக் காரணமானவர்களே தற்போது அது தொடர்பில் அறிக்கைகளை விடுத்து வருவது முரண்நகையாக உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக மதுபானங்களை மக்கள் மத்தியில் விநியோகிக்கும் கலாசாரத்தை மலையக அரசியல்வாதிகளே ஆரம்பித்து வைத்தனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
தற்காலத்தில் சமக ஊடகங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளபடியால் இதில் சில கட்டுப்பாடுகளை அவர் கடைப்பிடித்து வருகின்றார்களே ஒழிய, தேர்தல் காலங்கள் வந்தால் ஏதாவதொரு வகையில் மக்களுக்கு இரகசியமாக தமது ஆதரவாளர்களின் மூலமாக ஏதாவதொன்றை விநியோகித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்த வருடம் முழுதும் நுவரெலியா மாவட்டத்தின் பல தோட்டங்களை அண்டிய பிரதேசங்களில் புதிய மதுபானசாலைகளை அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கெதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததை மறக்க முடியாது. முக்கியமாக டயகம, குயில்வத்தை, இன்வரி ஆகிய பிரதேசங்களிலேயே புதிய மதுபானசாலைகளை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நுவரெலியா மாவட்டத்தில் கலால் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட சுமார் 234 மதுபான நிலையங்கள் மற்றும் விருந்தகங்கள் உள்ளன. இதில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான மதுபானசாலைகள் பெருந்தோட்டப்பகுதிகளை அண்மித்து அல்லது அதற்குள்ளேயே அமைந்துள்ளன. நுவரெலியா மாவட்டமானது உல்லசாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக உள்ளதால் மதுபானசாலைகளை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என மலையக பிரதிநிதிகள் சில சமாளிப்புகளை கூறி வருகின்றனர்.
இங்கு ஒரு விடயத்தில் தெளிவு பெற வேண்டியுள்ளது. உல்லாசப்பயணிகளில் 90 வீதத்துக்கும் அதிகமானோர் பியர் என்று அழைக்கப்படம் மதுசாரம் மிகக்குறைவான பானத்தையே அருந்துபவர்கள். 36 வீதத்துக்கும் அதிகமான மதுசாரம் கொண்ட மதுபானங்களை அவர்கள் அருந்துவது மிகக்குறைவு. மேலும் இலங்கையில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் அத்தனோல் மாத்திரமே உள்ளது.
வெளிநாடுகளைப் போன்று பழங்களினால் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் வைன் வகைகள் இங்கு தயாரிக்கப்படுவதில்லை.
உல்லாசப்பயணிகளாக இங்கு வருகை தருவவோர் இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகளை மிகக்குறைவாகவே நுகர்கின்றனர். உள்ளூரில் தயாரிக்கப்படும் பியர் வகை பானங்களையே அதிகமாக அருந்துகின்றனர். அப்படியானால் மதுசாரம் கூடிய மதுவகைகளை அருந்துவது யார்? யாரை குறி வைத்து இந்த மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு விடைகள் தெரிந்ததே.
2019 ஆம் ஆண்டின் கலால் திணைக்கள தகவல்களின் படி இலங்கையில், வெளிநாட்டு மதுமொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், மதுபான உரிமம் உள்ள ஹோட்டல்கள், ஹோட்டல்பார், சிற்றுண்டிச்சாலை, வாடி வீடு, மதுபான தவறணைகள் என மொத்தமாக 3,413 மதுபான நிலையங்கள் உள்ளன.
அதிக மதுபான உரித்துகள் விநியோகிக்கப்பட்ட மாகாணமாக மேல் மாகாணம் உள்ளது. இங்குள்ள மூன்று மாவட்டங்களில் கொழும்பில்- 804, கம்பஹாவில் 526, களுத்துறையில் 198 என மொத்தமாக 1528 மதுபானசாலைகள் உள்ளன.
அதே வேளை அதிக மதுபானசாலைகள் உள்ள இரண்டாவது மாகாணமாக மத்திய மாகாணம் விளங்குகிறது. இம்மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 289, நுவரெலியா மாவட்டத்தில் 234, மாத்தளை மாவட்டத்தில் 137 என மொத்தமாக 660 மதுபானநிலையங்கள் உள்ளன.
2020 இற்குப் பிறகு கொரோனா தொற்று காரணமாக புதிய மதுபான உரித்துகளை விநியோகிக்கவில்லையென தெரிவிக்கும் கலால் திணைக்களம், ஏற்கனவே உரிமம் பெற்று காலாவதியான அனுமதி பத்திரங்களே புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்த காரணத்தினால் பியர் பானங்களை மாத்திரம் விநியோகிக்கும் உரித்துகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
இத்தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இலங்கையில் அதிக மதுபாவனை நுகர்வோர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ளலாம். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் ஏன் பெருந்தோட்டங்களுக்கு அருகில் மதுபானசாலைகள் அமைக்கப்படுகின்றன என்பது பற்றி பிரதிநிதிகள் வாய் திறப்பதில்லை. தற்போது ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் மலையக சமூகத்துக்கு என்னென்ன செய்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் மலையகக் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் மதுபானசாலைகளை விட மேலதிகமாக தேவையில்லை என்றும் புதிய மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்படக் கூடாது போன்ற நிபந்தனைகளை வேட்பாளர்களிடம் முன்வைக்க எந்த மலையக அரசியல் கட்சியாவது முன்வருமா?