’அநாதை அரசியல்வாதிகள் பொய்களை பரப்புகின்றனர்’
.
அனைத்து மதங்களினதும் சுதந்திரமான வழிப்பாட்டு உரிமைகளையும் அனைத்து கலாச்சார உரிமைகளையும் பேணி பாதுகாத்து முன்னெடுத்துவருவதை ஏற்றுக்கொள்கின்ற ஒரு அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தியாகும் எனத் தெரிவித்துள்ள அந்த சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, அநாதை அரசியல்வாதிகள் பொய்களை பரப்புகின்றனர் என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி அஷ்சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, அஷ்சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.
நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடிய அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
பாராளுமன்றத்தில் நான் கூறிய ஒரு விடயத்தை திரிபுபடுத்தி கொண்டுச் செல்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதனைப் பற்றி பகிரங்கமாக கூறிவருகிறார். அரசியல் ரீதியாக நிர்க்கதி நிலையுற்றுள்ள குழுக்களின் பிரதான பணியாக இது அமைந்துள்ளது
மொழி ரீதியாக, மத ரீதியாக அதைப்போலவே கலாச்சார ரீதியாக எமது நாட்டில் பிளவுகளை வைத்துக்கொள்ளக்கூடாது. நாங்கள் இலங்கையர்கள் என்ற வகையில் ஒன்று சேரவேண்டுமென நம்புகின்ற ஒரு இயக்கமாகும். அன்று நான் பாராளுமன்றத்தில் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியது எமது நாட்டில் வன்முறையும் முரண்பாடுகளும் உருவாவது அந்தந்த சமூகத்தில் நிலவுகின்ற தீவிரவாத அரசியலின் காரணமாகவேயாகும் என்றார்.
எங்களுக்குத் தெரியும் சிங்கள சமூகத்தில் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைகளுக்கு அழைப்புவிடுக்கின்றன. அதைபோலவே தமிழ் சமூகத்தில் நிலவுகின்ற தீவிரவாத கூற்றுக்கள் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைக்கு வழிசமைத்தன. அதைபோலத்தான் முஸ்லிம் சமூகத்திலும் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைக்கு வழிசமைத்தது. அது ஒட்டுமொத்த மக்களுமல்ல என்றார்.
அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் மக்களும் இல்லை. எனினும் அத்தகைய மிகவும் சிறிய குழுக்கள் நிலைமையை திரிபுப்படுத்தி உண்மையான இறைவனோ அல்லது புத்த பிரானோ உபதேசித்த விடயங்களுக்கு பதிலாக அதற்கு தாமாகவே வியாக்கியானம் கற்பித்து சமூகத்தை தீவிரவாதத்தை நோக்கி கொண்டு செல்கின்றன என்றார்.