பெரும்பத்து கிராமத்தில் ஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச்சாவடி - மக்கள் எதிர்ப்புக்கு காரணம் என்ன?
பெரும்பத்து கிராமத்தில் மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.
திருநெல்வேலி,நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, இதுவரை ஒருவர் கூட வாக்கு செலுத்தாமல் அக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களம் காண்கிற நிலையில், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஆனால் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராம மக்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. இதனால் அந்த பகுதி வாக்குச்சாவடியே வெறிச்சோடி காணப்படுகிறது.
தேர்தலை புறக்கணிப்பதற்கான காரணம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனங்களில் அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து 2 பேரை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
முன்னதாக, பெரும்பத்து கிராமத்தில் மார்ச் 2 ஆம் தேதி இரவு இருசக்கர அரிவாளர்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் போதையில் வந்த மர்ம கும்பல் ஒன்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக வெட்டி தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் மாற்றுத்திறனாளி ஜான் (47) மற்றும் அருகிலுள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டிரானத் கட்டா ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் விசாரணை நடத்திய போலீசார் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், சாதி ரீதியான மோதல்கள் காரணமாக இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து உயிரிழந்த ஜானின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டுமென அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசாங்கம் இதுவரை உதவி செய்யவில்லை. இந்நிலையில் இந்த கொலை சம்பவங்களை காரணம் காட்டி, தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படதாதல், தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர் பெரும்பத்து கிராம மக்கள்.


