புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் காலமானார்.
ஈஸ்ரர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார்!

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் காலமானார் .
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி வைத்தியசாலைக்குச் சென்று, 38 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று வத்திக்கானுக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் (20) ஈஸ்ரர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த பாப்பரசருக்கு ஜனாதிபதி இரங்கல்.
உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக எனது இரங்கலை தெரிவிக்கின்றேன். வரியவர்களுக்கான பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மாறாத மனிதநேய நோக்கு உலகளாவிய ஒற்றுமைக்கான அவரது அயராத முயற்சிகள் மற்றும் அவரது ஆன்மீகத் தலைமைத்துவம் என்பன அனைத்து மதங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் நினைவுகள் இலங்கையிலும் சிறப்பான பக்தியுடன் அனுட்டிக்கப்படுகிறது. 2015 ஜனவரி மாதத்தில் நமது நாட்டிற்கு அவர் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம், பல வருடப் போருக்குப் பின்னர் இலங்கை மக்களை குணப்படுத்திய ஆன்மீக சிகிச்சை மற்றும் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பிற்கான தருணமாக என்றும் மக்களின் நினைவுகளில் நிலைத்திருக்கும்.
அவரது வருகை அமைதி, நம்பிக்கை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு விடுக்கப்பட்ட புதிய அழைப்பாக அமைந்திருந்தது. 1.7 மில்லியனுக்கும் கிட்டிய இலங்கை கத்தோலிக்க சமூகத்தினர், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களின் ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கான துயரத்தில் பங்கெடுத்துக்கொண்டுள்ளனர். மத வேறுபாடு இன்றி அமைதி, சகவாழ்வு மற்றும் மனித மாண்பை மதிக்கும் இலங்கையர்களின் நண்பராகவும், கடினமான காலங்களில் தார்மீக வழிகாட்டியாகவும் அவர் நினைவுகூரப்படுவார். இரக்கம், நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான சகவாழ்வுக்கான அவரது முன்மாதிரியான வாழ்க்கை, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக அமையும்.
பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் நித்திய இளைப்பாற்றிற்காக பிரார்த்திக்கிறேன்!
உலக அரசியலில் போப்பின் செல்வாக்கு என்ன..??? BBC
வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். இது உலக மக்கள் தொகையின் சுமார் 17 சதவிகிதம் ஆகும். போப்பாண்டவர், கத்தோலிக்க விசுவாசிகளை மட்டுமல்ல, வாடிகன் நகர அரசையும், அதனுடைய நிர்வாக அமைப்பான 'ஹோலி சீ'-யையும் (திருச்சபையையும்) வழிநடத்துகிறார். உலகத் தலைவர்களின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதில் வாடிகனால் எப்போதும் வெற்றி பெற முடியாது. ஒரு கத்தோலிக்கரான அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் , தனது அரசாங்கத்தின் குடியேற்றம் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்த இறையியலைப் பயன்படுத்தியபோது, போப்பாண்டவர் 'இயேசுவே ஒரு அகதி' என்று வாதிட்டு கடுமையான வார்த்தைகளைக் கொண்ட கடிதத்தை எழுதினார்.
மற்றொரு கத்தோலிக்கரான அமெரிக்க "எல்லை ஜார்", டாம் ஹோமன், "போப் கத்தோலிக்க திருச்சபையை சரி செய்வதோடு நின்று கொள்ள வேண்டும்,"என்று அதற்கு பதில் அளித்தார். 2020 ஆம் ஆண்டில், போப் பிரான்சிஸ் அமேசானைப் பாதுகாக்க வாதிட்டபோது, பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அவரை விமர்சித்தார். "போப் அர்ஜென்டினியராக இருக்கலாம், ஆனால் கடவுள் பிரேசிலியன்" என்று போல்சனாரோ பதிலளித்தார். திருச்சபையின் சமூக செல்வாக்கு ஐரோப்பாவில் குறைந்து விட்டது. LGBT+ உரிமைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு போன்ற சமூக பிரச்னைகளில் அதன் பழமைவாத நிலைப்பாடு 21ஆம் நூற்றாண்டிற்கு அப்பாற்பட்டது என்று பலர் வாதிடுகின்றனர். பெண்களை பாதிரியார்களாக அல்லது டீக்கன்களாகப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற போப் பிரான்சிஸின் முடிவு, இதை எடுத்துக்காட்டுகிறது.