தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்..
.
ஐந்து அம்சக் கோரிக்கை
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
புலிகளின் வரலாற்றில் இடம்பெற்ற இரண்டு உண்ணா விரதங்களுமே, இந்தியாவிற்கு எதிராக, இந்தியாவின் செயலைக் கண்டித்தே நடைபெற்றிருந்தன. இந்தியாவைப் பொறுத்தவரையில், உண்ணாவிரதம் என்ற அகிம்சை வழிப் போராட்டம் ஒரு பாரிய உணர்வினை வெளிக்காண்பிக்கும் ஒரு விடயமாகவே இருந்து வந்தது. இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி முதல், இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவருமே உண்ணாவிரப் போராட்டங்கள் மூலமே பல விடயங்களைச் சாதித்திருந்த வரலாறு இந்தியாவின் சரித்திரத்தில் நிறையவே காணப்படுகின்றன. சாதாரணமாகவே இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு, அது நியாயமாக இருக்கும் பட்சத்தில், செவிசாய்க்கும் வழக்கம் எந்தவொரு இந்திய அரசாங்கத்திற்கும் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. தனது தமிழ் இனத்தின் நியாயமான கோரிக்கைக்கு இந்தியா நிச்சயம் செவிசாய்த்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் திலீபனும் இந்தியாவின் போக்கிற்கு எதிரான தனது போராட்டத்திற்கு ஆயுதமாக உண்ணா விரதத்தை தேர்ந்தெடுத்திருந்தான்.
திலீபனின் தியாகப் பயணம்
15.09.1987 காலை 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள கந்தன் கருணை என்னும் இல்லத்தில் இருந்து ‘வோக்கி டோக்கி சகிதமாக திலீபன் புறப்பட்டார்.
வேனில் ஏறுவதற்கு முன்னதாக, வோக்கி மூலம் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சிறிது நேரம் பேசி விட்டே, தனது வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்தார். அது வரலாற்றில் என்றுமே மறைந்துவிடாத ஒரு பயணமாக அமையப்போகின்றது என்பதை திலீபன் அப்பொழுது அறிந்திருந்தாரோ தெரியவில்லை. பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடி நின்று திலீபனை வழியனுப்பி வைத்தார்கள். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த உண்ணா விரத மேடையில், ஏற்கனவே சோகம் குடிகொண்டிருந்தது. தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு இளைஞன், இந்த மேடையில் தன்னை மாய்த்துக்கொள்ள முன்வரும் செய்தி ஏற்கனவே அங்கு திரண்டிருந்த மக்களின் நெஞ்சங்களை கனக்க வைத்திருந்தது.
‘வானில் வந்திறங்கிய திலீபனை, புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா கட்டியணைத்து வரவேற்றார். கண்ணீருடன் ஒரு தாய் திலீபனின் நெற்றியில் வீரத் திலகமிட்டார். காலை 9.55 இற்கு உண்ணா விரத மேடையில் வந்தமர்ந்த திலீபன், விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் என்றுமே மறையாத ஒரு உன்னத பயணத்தை ஆரம்பித்தான். திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக, இரண்டாவது மேடையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. கவிஞர் காசி ஆனந்தன், நடேசன் போன்ற முக்கியஸ்தர்கள், எதற்காக திலீபன் உண்ணா விரதம் இருக்கின்றார் என்றும், புலிகளின் நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார்கள். திலீபனின் உண்ணா விரதத்திற்கு துணையாக பலர் அடையாள உண்ணா விரதம் மேற்கொள்ள முன்வந்தார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் என்று பலர், சுழற்சி முறையில் உண்ணா விரதத்தை மேற்கொண்டார்கள். திலீபனின் உண்ணாவிரத மேடையைச் சூழ பெரும் திரளான ஜனக்கூட்டம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டது.
மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். யாழ்பாணத்தின் குக்கிராமங்கள், மூலை முடுக்குக்களில் இருந்தெல்லாம், இந்த வீர இளைஞனின் தியாகத்தை தரிசிக்க மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தபடி இருந்தார்கள். பாடைசாலை மாணவர்கள் அணி அணியாக அங்கு திரண்டு வந்தார்கள். உணர்ச்சிகரமான ஒரு சூழ்நிலை அங்கு உருவாக ஆரம்பித்திருந்தது. இந்த இளைஞனின் முடிவிற்கு இந்தியாதான் காரணம் என்ற உண்மை அங்கு திரண்டிருந்த மக்களின் மனங்களில் படிப்படியாக உதிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவிற்கு எதிரான உணர்வலை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களில் ஏற்பட ஆரம்பித்தது. அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களது உணர்வுகளின் வெளிப்பாடுகள், இந்தியாவிற்கு எதிரான முணுமுணுப்புக்களாகவும், பின்னர் இந்தியப்படைகளுக்கு எதிரான கோஷங்களாகவும், மாற்றமடைய ஆரம்பித்தன. இந்தியப் படைகளுக்கு எதிரானதும், இந்தியாவின் போக்கிற்கு எதிரானதுமான ஒரு இறுக்கமான நிலை படிப்படியாக யாழ் மக்களின் மனங்களில் உருவெடுக்க ஆரம்பித்தன.உண்ணாவிரதம் ஆரம்பமான தினம் இரவு 11 மணியளவில் பிரபாகரன் திலீபனை பார்வையிட வந்திருந்தார். திலீபனுடன் பல விடயங்கள் பற்றி உரையாடிய பிரபாகரன், திலீபனின் தலையை வருடிவிட்டுச் சென்றார்.
திலீபனின் உரை
உண்ணாவிரதம் ஆரம்பமாகி இரண்டாவது நாள், திலீபன் உரை நிகழ்த்தினார். ஒரு துளி நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்ததால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் பெரும் சிரமப்பட்டார். அதிக உடல் உபாதை காரணமாக மிகவும் கஷ்டங்களை அனுபவித்த அவரால் நின்று கொண்டு உரை நிகழ்த்த முடியவில்லை. அதனால் இருந்த நிலையிலேயே அவர் உரையாற்றினார்.“எனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேச முடியாத நிலையில் நான் இருப்பதால், இருந்துகொண்டே பேசுகின்றேன்.
நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேசவேண்டும் என்று விரும்புகின்றேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். எமது இலட்சியப் போராட்டத்தில் இன்று வரையில் 650 போராளிகளை நாங்கள் இழந்துள்ளோம். மில்லர் இறுதியாகப் போகும் போது அவருடன் நான் கூட இருந்தேன். அவர் என்னிடம் ஒரு வரி கூறினார்: நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது, மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன். எமது மக்கள் விடுதலை அடைவதை எனது கண்களால் காணமுடியாது என்பதே எனது ஒரே ஏக்கம் என்று கூறிவிட்டு, மில்லர் வெடிமருந்து நிறப்பிய லொறியை எடுத்துச் சென்றிருந்தார். எமது விடுதலைப் போரில் மரணித்த 650 போராளிகளும், அனேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அவர்களை நான் மறக்கமாட்டேன். உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க தலைவரின் அனுமதியைக் கேட்டேன்.
அப்பொழுது தலைவர் கூறிய வார்த்தைகள் எனது நினைவில் உள்ளன. திலீபா, நீ முன்னால் போ. நான் பின்னால் வருகின்றேன் என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரை சிறிது கூட மதிக்காத ஒரு தலைவனை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளை, தமிழீழத்தைப் பெற்றுத் தரும். அந்த அற்புதக் காட்சியை வானத்தில் இருந்து, அந்த 650 போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.என்று திலீபன் உரையாற்றினார்.