மக்களின் தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் – எம்.ஏ.சுமந்திரன்
.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை (21) இரவு நடைபெற்ற நிலையில், குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமையப்பெற்றுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தலைமையைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு மக்களிடத்தில் இருக்கின்றது. ஆகவே மக்கள் சரியான தீர்ப்பினை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்புள்ளது.
அத்துடன் இந்த ஜனாதிபதி தேர்தல் சரியானதொரு திருப்பு முனையாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அல்லோலகல்லோப்பட்டிருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது. ஆகவே மக்கள் தமது வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
தேர்தலில் ஏற்படுகின்ற மாற்றமானது, நாட்டிக்கும், மக்களுக்கும் சிறந்தவொரு வழியைக் காண்பிக்கும் என்று நான் நம்புகின்றேன் என்றார்.