செம்மணி மற்றும் நல்லூரில் அமைச்சர் சந்திரசேகரன் தடுக்கப்பட்டதை வரவேற்கிறோம்!
விமல் வீரவன்சவுக்கு நிகராக ,போட்டியாக ஊடகங்களில் இனவாதம் கக்கிய, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வலம் வந்தவர் இந்த ராமலிங்கம் சந்திரசேகரன் என்பதனை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி காணப்படுகின்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு மற்றும் தற்போது நல்லூரில் நடைபெற்று வருகின்ற தியாக செம்மல் திலீபன் நினைவேந்தல் நிகழ்விலும் நீலிக்கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்துவதற்கு வருகைதந்த கடற்தொழில் அமைச்சர் திரு . ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பிய செயற்பாட்டினை பெரிதும் வரவேற்பதாக தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சியாக விளங்குகின்ற ஜனநாயக தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.கருணாகரன் குணாளன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 2008 மற்றும் 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்புக்களில் தற்போது அமைச்சராக விளங்குகின்ற ராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் உரிமை சார்ந்த விடுதலை போராட்டத்திற்கும் எதிராகவும் கருத்துக்களை கூறியமை தொடர்பாக எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
அதாவது வன்னியில் அப்போது சிறீலங்கா ராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணை தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களும் புலிப் பயங்கரவாதிகள் என்றும் யுத்தம் என்றால் அனைவரும் கொல்லப்படக்கூடுமென்றும் விமல் வீரவன்சவுக்கு நிகராக ,போட்டியாக ஊடகங்களில் இனவாதம் கக்கிய அப்போதைய ஜேவிபி கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ராமலிங்கம் சந்திரசேகரனுக்காக நியாயம் கோருபவர்கள் இந்த வரலாற்றினை என்னிடம் அறிந்து கொள்ளலாம்.
இந்நபரை நியாயப்படுத்த முயற்சிப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்பியடித்து மீளவும் யுத்தத்தினை ஆரம்பித்து விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்று கோரியும் , சுனாமி பேரழிவு தொடர்பான இரு தரப்பினருக்கும் இடையிலான பொதுக்கட்டமைப்புக்கு எதிராகவும் , தமிழர் தாயகமான இணைந்த வடகிழக்கு மாகாணங்களை பிரிக்க வேண்டும் என்று கோரியும் இன்று தேசிய மக்கள் சக்தி என்கிற பெயரால் அழைக்கப்படுகின்ற ஜனதா விமுக்தி பெரமுன ( ஜேவிபி ) இனவாத ரீதியாக தென்னிலங்கையில் தொடர்ச்சியான வீதி மறியல் போராட்டங்கள் , அடையாள உண்ணாவிரத போராட்டங்கள் , எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்று தொடர்ச்சியான முன்னெடுப்புக்களை ஏனைய இனவாத அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுத்திருந்தது . அக்காலகட்டத்தில் ஜேவிபி கட்சியின் மிக முக்கிய உறுப்பினராகவும் , தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வலம் வந்தவர் இந்த ராமலிங்கம் சந்திரசேகரன் என்பதனை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது. அத்தோடு இவ்வாறான தமிழ் இனத்துக்கு எதிராக அவர் மேற்கொண்ட செயற்பாடுகளுக்காக இதுவரை காலப்பகுதியில் மன்னிப்பு கோரவும் இல்லை.
உலகின் ஒப்பற்ற சத்தியாக்கிரக போராளியாக கருதப்படுகின்ற தியாகி திலீபனுக்கு மாத்திரமல்ல செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் போன்ற அனைத்து தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல்களிலும் நீலிக்கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்துவதற்கு இவரைப்போன்ற நபர்களுக்கு அனுமதியளிக்கவே முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


