பிரிட்டன் தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேற ரஷ்யா உத்தரவு: உச்சத்தில் பதற்றம்
.
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரஷியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான எஃப்எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாஸ்கோவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் உள்ள ஆறு அதிகாரிகளின் செயல்பாடுகள், அவா்கள் ரஷ்யாவுக்கு எதிரான உளவு வேலைகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.
ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான தூதரக மற்றும் இராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மாஸ்கோவிலுள்ள பிரிட்டன் தூதரகம் ஒருங்கிணைந்து நடத்துகிறது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவைத் தோல்வியை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எனவே, மாஸ்கோவில் செயல்பட்டுவரும் குறிப்பிட்ட ஆறு தூதரக அதிகாரிகளும் ரஷ்ய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவா்கள் என்பது உறுதியாகியுள்ளது.
எனவே, அவா்கள் அனைவரது தூதரக அங்கீகாரம் பறிக்கப்படுகிறது.
மேலும், அவா்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உளவுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகள் பெயா்களை படங்களுடன் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
மேற்கத்திய நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது.
இதில், உக்ரைனின் சுமாா் ஐந்தில் ஒரு பகுதி பிரதேசத்தை ரஷியா கைப்பற்றியது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ஏவுகணைகள், பீரங்கிகள், போா் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை அளித்து உதவிவருகின்றன.
தனது எல்லையை தற்காத்துக்கொள்வது உக்ரைனின் அடிப்படை உரிமை எனவும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதாகவும் மேற்கத்திய நாடுகள் கூறிவருகின்றன.
எனினும், உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய படையினருக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு மேலை நாடுகள் வழங்குகின்றன.
ஏற்கெனவே, உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதன் மூலம் இந்தப் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டிவரும் நிலையில், ரஷிய நாட்டின் மீது தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டால், அது உலகின் மிகப் பெரிய அணு ஆயுத சக்தியான அந்த நாட்டுக்கும் தங்களுக்கும் இடையிலான நேரடி போராக உருவெடுக்கும் என்று நேட்டோ நாடுகள் கருதுவதாலேயே இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது.
எனினும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் அந்த நாட்டுப் படைகள் ஏவப்படும் நிலைகள் மீது மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைக் கொண்டு எல்லை கடந்து தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்திவருகிறாா்.
இந்தச் சூழலில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மரும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தங்கள் ஏவுகணைகளை ரஷியா மீது பயன்படுத்த அனுமதி அளிப்பாா்கள் என்று செய்திகள் வெளியாகின.
இதனால் ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், உளவுக் குற்றச்சாட்டின் பேரில் ஆறு பிரிட்டன் தூதா்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டுள்ளது.