ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி- பொதுஜன பெரமுன; இடதுசாரி கூட்டணி அமைக்க கலந்துரையாடல்?
.
இடதுசாரி கூட்டணி ஒன்றை கட்டியெழுப்புவது தொடர்பில் சில எதிர்க்கட்சிகள் கலந்துரையாடி வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து நீங்கி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய குழுவினர் இந்த கலந்துரையாடலில் முதன்மை வகித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, நிமல் லான்சா , அனுர பிரயதர்ஷன யாப்பா, எஸ். பீ. திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பரந்த கூட்டணியொன்றின் கீழ் போட்டியிடுவது அவர்களின் நோக்கமாக காணப்படுகின்றது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைவது தொடர்பில் இங்கு ஒரு தரப்பினர் யோசனை முன்வைத்துள்ள நிலையில் அதில் கலந்துக்கொண்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
இந்தக் கூட்டணியுடன் இணைவதை விட சக்திவாய்ந்த இடதுசாரி கூட்டணி ஒன்றை உருவாக்கி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே அவசியம் என இதன்போது பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த இடதுசாரி கூட்டணியின் சின்னம் எதிர்வரும் சில நாட்களுக்குள் பிரசித்தப்படுத்தப்படும் எனவும் இதுவரையில் கிண்ணம் மற்றும் கதிரை போன்ற சின்னங்கள் குறித்த கூட்டணிக்கு பொருத்தமான சின்னங்களாக முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.