சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு லசந்தவின் மகள் எழுதிய கடிதம்
,

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுர பி.மெத்தேகொடவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
கடந்த காலங்களில் கவனத்தை ஈர்த்துள்ள பல குற்றவியல் விசாரணைகள் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுர பி. மெத்தேகொடவுக்கு அஹிம்சா விக்ரமதுங்க எழுதிய கடிதத்தில் சட்டமா அதிபர் அலுவலகம் முறையாக நீதி வழங்கத் தவறியதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இரண்டு வழிகளில் பதிலளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மனித உரிமைகளுக்காகப் போராடுவதில் சட்டத்தரணிகள் சங்கம் முன்னணியில் இருப்பதாக அனுர பி. மெத்தேகொட ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையும் இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுப்பதில் ஏற்பட்ட நீண்டகால தாமதம் தொடர்பில் மெத்தேகோட கேள்வி கேட்கத் தவறியதை மேற்கோள் காட்டி சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் நீதிக்கான அர்ப்பணிப்பு தொடர்பில் அஹிம்சா விக்ரமதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிபுபடுத்தப்பட்ட பொலிஸ் அறிக்கைகள் உட்பட முக்கியமான ஆதாரங்களை புறக்கணித்ததாகவும் முழுமையாக விசாரிக்காமல் அல்லது அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொள்ளாமல் முடிவுகளை எடுத்ததாகவும் அஹிம்சா விக்ரமதுங்க சட்ட மாஅதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டவாட்சியை குறைத்து மதிப்பிடலுக்கு உட்படுத்தியதற்காக சட்ட மாஅதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர வேண்டும் என்று அவர் மேலும் கோரியுள்ளார்.
தனது தந்தைக்கு மட்டுமல்ல பாரிந்த ரணசிங்கவின் மேற்பார்வையின் கீழ் தவறாகக் கையாளப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வலுவான நிலைக்கு கொண்டுவருவதற்காக செயற்படுமாறு அஹிம்சா விக்ரமதுங்க சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியுள்ளார்.