பொதுவேட்பாளரை ஆதரிப்பதில் உறுதியா?; பிரித்தானியாவில் ஸ்ரீதரன் தெரிவித்தது என்ன?
.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் தான் உறுதியாக இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் பயணத்தையும் அது சார்ந்த பணிகளையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த சிறீதரன் அங்கு புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்,
‘ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியல் பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன்.
எனது அரசியல் பயணத்தையும், அது சார்ந்த பணிகளையும் அதே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் இறுதி வரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.