ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட காட்டமான அறிக்கை: இலங்கை அரசாங்கம் முற்றிலும் நிராகரிப்பு
.
தீவு தேசம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றிலும் நிராகரித்துள்ளது.
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் கலந்துகொண்ட இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹிமாலி அருணதிலக இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகத்தின் 51/1 தீர்மானத்தை இலங்கை கடுமையாக நிராகரிப்பதாக ஹிமாலி அருணதிலக இதன்போது தெரிவித்தார்.
இந்த தீர்மானம் இலங்கையின் அங்கீகாரம் இன்றி பிளவுபட்ட வாக்குகள் ஊடாக நிறைவேற்றப்பட்ட ஒன்றென அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனம் மற்றும் அது தொடர்பான உடன்படிக்கைகளுடன் ஈடுபடுவதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது.
இதன்படி, காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR), தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR), வெளிநாட்டு இலங்கையர்களுக்கான அலுவலகம், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (OMP) உட்பட உள்நாட்டு செயல்முறைகள் மூலம் தொடர்ச்சியாக அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
நாட்டு மக்களின் செழிப்புக்காக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருப்பதுடன், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் இலங்கை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆதரவாக ‘அஸ்வெசும’ திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கையின் எதிர்ப்பை தான் பதிவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையானது, மனித உரிமைக் கோளத்திலிருந்து விலகி, மேக்ரோ பொருளாதாரம் மற்றும் இறையாண்மை நாடாளுமன்ற வரம்புக்குட்பட்ட நிதி மற்றும் பட்ஜெட் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
எமது ஏனைய சர்வதேச பங்காளிகளின் எதிர்வினைக்கு மாறாக, இது இலங்கையின் எதிர்காலத்திற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.
சமூக ஸ்திரத்தன்மை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்தல் மற்றும் சமீபத்திய கடுமையான சவால்களை கடந்து, உணவு, ஆற்றல் மற்றும் மறுசீரமைப்புடன் இயல்புநிலைக்கு திரும்புவதை அங்கீகரிக்கத் தவறிவிட்டது.
மேலும், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாதச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அறிக்கையில் குறிப்பிடவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“51/1 தீர்மானம் மற்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குவிற்குள் நிறுவப்பட்ட வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை இலங்கை வலுவாக நிராகரித்ததை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்த பயனற்ற மற்றும் தேவையற்ற பொறிமுறையானது பேரவையின் ஆணையை மீறுகிறது, அதன் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு முரணானது.
அத்துடன், உள்நாட்டில் நாம் செய்த முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.