அமெரிக்காவின் DOGE ரத்து செய்த சுமார் ரூ.174 கோடி! இந்தியாவின் எதிர்வினை என்ன?
,

இந்திய தேர்தல்களில் வாக்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட நிதியை ரத்து செய்வதாக அமெரிக்காவின் அரசு திறன் மேம்பாட்டு துறை (DOGE) அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அரசு திறன் மேம்பாட்டு துறை (Department of Government Efficiency - DOGE / டோஜ்) இந்திய தேர்தல்களில் வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.174 கோடி) நிதியை ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.க., இந்திய தேர்தலில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை எனக் கூறியிருக்கிறது.
டோஜ் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில், இந்திய வாக்களிப்பு சதவீத உயர்வுக்காக ஒதுக்கப்பட்ட $21 மில்லியன் (சுமார் ரூ.174 கோடி) ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
தற்காலிக அமைப்பின் தாக்கம்:
டோஜ் என்பது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைச்சரை பிரிவல்ல. இது, அரசின் ஒரு தற்காலிக அமைப்பாகும். இது முன்னதாக யுனைட்டட் ஸ்டேட்ஸ் டிஜிட்டல் சர்வீஸ் (United States Digital Service) என அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அதிபர் டிரம்ப், தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து, செயல்திறனை அதிகரிப்பதே ‘டோஜ்’ அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதை முன்னிட்டு பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதிகளை இந்த அமைப்பு ரத்து செய்தும், ஒத்திவைத்தும் வருகிறது.
‘டோஜ்’ வெளியிட்ட பட்டியலில் பல்வேறு நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன:-
- மொசாம்பிக் - ஆண்கள் சுகாதாரச் சேவைக்காக கொடுக்கப்பட்ட $10 மில்லியன் (ரூ.83 கோடி)
- கம்போடியா - தொழில் திறன் மேம்பாடு நிதியாக வழங்கப்பட்டு வந்த $9.7 மில்லியன் (ரூ.80 கோடி)
- செர்பியா - அரசாங்கம் தொடர்பான செயல்திறன் மேம்பாடுக்காக அளித்துவந்த $14 மில்லியன் (ரூ.116 கோடி)
- மாலி - சமூக ஒருமைப்பாடுக்காக வழங்கப்பட்ட $14 மில்லியன் (ரூ.116 கோடி)
- மால்டோவா - அரசியல் பங்கேற்புக்காக வழங்கப்பட்டு வந்த $22 மில்லியன் (ரூ.182 கோடி)
- இந்தியா - வாக்களிப்பு சதவீத உயர்வுக்காக கொடுக்கப்பட்ட $21 மில்லியன் (ரூ.174 கோடி)
- வங்கதேசம் - அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த $29 மில்லியன் (ரூ.240 கோடி)
- நேபாளம் - நிதி மையமாக்கல் திட்டத்திற்காக வழங்கப்பட்ட $20 மில்லியன் (ரூ.166 கோடி)
- நேபாளம் - பசுமை சூழல் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட $19 மில்லியன் (ரூ.158 கோடி)
- கொசோவோ - மறுசுழற்சி திட்டத்திற்காக அளித்து வந்த $2 மில்லியன் (ரூ.16 கோடி)
CEPPS என்றால் என்ன?
இந்த $21 மில்லியன் (சுமார் ரூ.174 கோடி) தேர்தல்கள் மற்றும் அரசியல் செயல்முறை வலுப்படுத்தலுக்கான கூட்டமைப்பின் (Consortium for Elections and Political Process Strengthening - CEPPS) வழியாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. CEPPS என்பது 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது மூன்று முக்கிய இணை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.
அவை, தேர்தல் முறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளை (International Foundation for Electoral Systems - IFES), சர்வதேச குடியரசு நிறுவனம் (IRI), தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) ஆகியனவாகும். இதில் சர்வதேச குடியரசு நிறுவனமும், தேசிய ஜனநாயக நிறுவனமும் அந்தந்த அரசியல் கட்சிகளின் பெரும் பங்கீட்டுடன் செயல்பட்டு வருகிறது.
அதாவது, உலகளாவிய ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் அமைப்பாக இது விளக்கப்படுகிறது. ஆனால், இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக முயற்சித்தபோது, அது வேலை செய்யவில்லை என்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச தேர்தலில் அமெரிக்காவின் ஈடுபாடு:
அமெரிக்க அரசு, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID), ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (NED), பாதுகாப்புத் துறை (DoD) போன்ற அமைப்புகளின் வாயிலாகப் பல்வேறு நாடுகளின் தேர்தல் முறைகளில் நிதி மற்றும் ஆதரவினை வழங்குகிறது.
ஜனவரி 20, 2025 அந்நாட்டின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் அரசு பதவியேற்றது முதல், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவன நிதியை நிறுத்தி விட்டதால், பல்வேறு நாடுகளின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?
இந்த அறிவிப்பு வெளியான உடன், இந்திய அரசியல் கட்சிகள் இதற்கு தகுந்த எதிர்வினை ஆற்றியுள்ளன. அதன்படி, இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
அவர் தன் எக்ஸ் பதிவில் "21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.174 கோடி) வாக்களிப்பு சதவீத உயர்வுக்கு? இது இந்திய தேர்தல் முறையில் வெளிநாட்டு தலையீடாகும். இதன் மூலம் யார் பயன்பெறுகிறார்கள்? ஆளும் கட்சி அல்ல என்பதில் எனக்கு சந்தேகமில்லை!" எனத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குள்ளாகும் வங்கதேசத்துக்கான நிதி ஒதுக்கீடு
டோஜ் வெளியிட்ட பட்டியலில் வங்கதேச அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த $29 மில்லியன் (ரூ.240 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வங்கதேச தேர்தலில் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார்.
ஆனால், மே 2024இல் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு, ஹசீனா அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பலர் இதை "அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தலையீடு செய்தது" என குற்றம்சாட்டினர்.
இந்த அறிவிப்பு உலகளாவிய தேர்தலில் வெளிநாட்டுச் செல்வாக்கை வெளிப்படுத்துகிறதா என்பதை எதிர்வரும் தேர்தல்கள் கணக்கிட்டு சொல்லும் என எதிர்பார்க்கலாம்.